மாணவர்கள்மீதான தாக்குதல்: தமிழீழத்தில் ஆரம்பமாகிறது புதிய போர்க் களம்!

இலங்கைத் தீவின் இனப் பிரச்னைக்கு இரண்டே வழிகளில்தான் தீர்வைக் காண முடியும். ஒன்று பிரிக்கப்படாத இலங்கைத் தீவில் இணைந்து வாழுதல். இரண்டாவது, தமிழ் மக்களது விருப்பமான தமிழீழம் என்ற தனி நாட்டை உருவாக்குதல்.

பிரிக்கப்படாத இலங்கைக்குள் என்ற அனைத்துலக விருப்பமும், இந்தியாவின் இலக்கும் சாத்தியமாகவேண்டுமானால், சிங்கள இனம் சமகால மனித நாகரிகங்களுக்குள் நுழையவேண்டும். அது உடனடிச் சாத்தியமாகத் தோன்றவில்லை. மகாவம்சக் கனவுகளுக்குள் புதைந்து போயுள்ள சிங்கள மனங்களை உடனடியாக அதிலிருந்து மீட்டெடுப்பது என்பது முடியாத விடயமாகவே உள்ளது.

முள்ளிவாய்க்கால் வரையும், அதற்குப் பின்னரான இது வரை காலமும் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அவலங்களும், இழப்புக்களும், வேதனைகளும், அவமானங்களும், உயிரிழப்புக்களும் சிங்கள மக்களது மகாவம்சக் கனவைக் கலைத்துவிடவில்லை.

தமிழ் மக்கள்மீதான சிங்கள அரச படைகளின் தமிழின அழிப்பினைத் தமது இனத்தின் வெற்றியாகவும், அதனைப் பெறுவதற்குக் காரணமான ராஜபக்ஷக்கள் பெரு மதிப்பிற்குரியவர்களாகவும் சிங்கள மக்களால் நம்பப்படும் நிலையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழ்வது என்பது, தமது இனத்தை அழித்து இல்லாமல் செய்யும் உரிமையை சிங்கள மக்களிடம் வழங்குவதானதாக மட்டுமே இருக்கும்.

இலங்கைத் தீவில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் ஈழத் தமிழர்களது அவலங்களில் எந்த மாற்றமும் உருவாக்கப்படவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு என்ன பிரச்னை? என்பது குறித்து மீண்டும் ஒரு குழு அமைத்து விசாரிப்பது பற்றியே சிங்கள ஆட்சியாளர்கள் கூறி வருகின்றார்கள்.

30 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டங்களின் மூலமும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலமும் சிங்கள ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ளப்படாத தமிழ் மக்களது பிரச்னையை சிங்கள ஆட்சியாளர்கள் பேசித் தீர்வு காணப் போவதாகத் தெரிவிப்பது எவ்வளவு கொடூரமானது என்பதை இன்றுவரை உலகால் புரிந்துகொள்ளப்படாமலேயே உள்ளது.

கொடூரமான போர் ஒன்றில் பலியாகிப்போன தங்கள் உறவுகளை நினைப்பதும், அழுவதும், தொழுவதும் பெரும் குற்றமாக சிங்கள ஆட்சியாளர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2009 வரை மாவீரர்களாக அர்ச்சிக்கப்பட்ட தங்களது காவல் தெய்வங்களின் கல்லறைகளில் விளக்கு வைக்கும் உரிமையோ, மாவீரர் நாளில் கூடி நின்று அஞ்சலிக்கும் உரிமையோ மறுக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கி எழுந்துள்ளது வடகிழக்கு பல்கலைக் கழக மாணவர் சமூகம்.

இது ஈழத் தமிழினத்தின் இன்னொரு விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பமாகவே கருதப்படுகின்றது. அடக்கு முறைக்குள்ளான இனத்தின் மத்தியில் இருந்து கிளம்பும் இளைய தலைமுறையின் எழுச்சி என்பது, அந்த இனத்தையே போர்க் களத்தை நோக்கி நகர்த்தும் வல்லமை கொண்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களையும், கைதுகளையும் எதிர்த்துப் பல்வேறு கண்டனக் கணைகள் உலகெங்குமிருந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

தமிழீழத்தின் அரசியல் அணிகள் தமக்கிடையேயான அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து போராட்டத்திற்கான தேதியாக டிசம்பர் 04-ஐ பிரகடனப்படுத்தியுள்ளார்கள். புலம்பெயர் தளங்களில் தமிழீழ மாணவர்களுக்கான போராட்டத்தை இளையோர் கையேற்றிருக்கின்றார்கள்.

இந்த ஜனநாயகப் போராட்டத்தின் எழுச்சி தமிழீழ விடுதலைப் போர்க் களத்தை இன்னொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்தப் போராட்டத்தில், தமிழீழம் போலவே புலம்பெயர் தமிழர்களும் பிளவுகளையும், காழ்ப்புணர்வுகளையும் கைவிட்டு ஒரே தளத்தில் நின்று போராட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாமும் போர்க் களத்தை நோக்கி அணிவகுப்போம்!

– அகத்தியன்

TAGS: