விரைவில் விடுதலைப் பிரகடனம்: நாடு கடந்த தமிழீழ அரசு அறிவிப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் விரைவில் ‘விடுதலை’ பிரகடனம் வெளியிடப்படும் என்று அதன் தலைமையமைச்சர் வி. உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

இலண்டனில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாட்டில் உருத்திரகுமாரன் ஆற்றிய உரை:

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நாம் விவாதித்து ஏற்றுக்கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை 3 ஆண்டுகள் என நிர்ணயம் செய்தது. இதனால் புதிய அரசுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடும் அனைத்துலக அரங்கில் பெரும் தாக்கத்தை (Multiplier effect) ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைய வேண்டும்.

தாயகத்தில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு நடவடிக்கைகளையும் அராஜகச் செயற்பாடுகளையும் உடனுக்குடன் அனைத்துலச சமூகத்தின் முன்னால் கொண்டு செல்லுதலும் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் அவசிய நடவடிக்கைகைளாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய அரசியல் அமைப்புக்களுடன் தோழமையுணர்வுடன் இயங்குகிறது. தொடர்ந்தும் அவ்வாறே இயங்கும். உதாரணமாக, இம் மாத ஆரம்பத்தில் பிரிட்டன் தமிழர் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு தமிழருக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டில் பிரிட்டன் தமிழர் பேரவையின் அழைப்பினை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கேற்றிருந்தது.

ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் நடத்திய இனஅழிப்புக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் உட்பட்ட அனைத்துலகச் சமூகம் துணைபோயிருக்கிற உண்மை அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. எமது மக்களுக்கு இழைக்கபட்ட அநீதிக்கு அனைத்துலக சமூகம் பொறுப்பேற்க வேண்டும். அனைத்துலக சமூகம் இழைத்த தவறுக்கு பரிகாரம் வேண்டும். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வேண்டும். இந்தப் பரிகாரம் என்பது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசு ஒன்றாக மட்டும்தான் இருக்க முடியும்.

ஈழத் தமிழர் தேசத்துக்குச் சாதகமான வகையில் அமையக்கூடிய முறையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட உலகநாடுகளின் வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதற்கு உரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் விரைவில் தென் ஆபிரிக்கா சுதந்திரப் போரட்டக் காலத்தில் ஆபிரிக்க தேசியக் காங்கிரஸினால் பிரகடனப்படுத்தபட்டது போன்ற சுதந்திரப்பட்டயம் (Freedom charter) ஒன்றினை பிரகடனப்படுத்த இருக்கிறது.

ஈழத் தமிழர் தேசத்துக்கு மட்டுமல்ல ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஏனைய தேசிய இனங்களுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த ரீதியில் அமைக்கபபட்டுள்ள ஒரு மக்கள் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முன்னுதாரணமாக உள்ளோம்.

பல நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு புகலிட அரசாங்கத்துக்கும் நாடு கடந்த அரசாங்கத்துக்கம் இடையிலான வேறுபாடுகளைத் புரிந்து அவை குறித்து மேலும் அறிய முற்பட்டுள்ளனர். பல அறிஞர்களும் ஆய்வாளர்களும் தமது புலமைக் கண் கொண்டு எம்மை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவின் ஆய்வு நிறுவனம் ஒன்றின் ஆதரவுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினையும் திபேத்திய புகலிட அரசாங்கத்தையும் ஒப்பு நோக்கி ஆய்வு ஒன்று தற்போது மேற்கொள்ளபடுகின்றமை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

இவ்வாறு உருத்திரகுமாரன் உரையாற்றினார்.

TAGS: