காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது நிச்சயம் – இலங்கைக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது போனால், அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில், கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பங்கேற்கமாட்டார் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்ரியன் றோய்,

“போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்தப்பியவர்களுக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்து நியாயம் வழங்கத் தவறி வருவதாகவே கனடா உணர்கிறது. சிறிலங்காவில் நீதிபதிகள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பான அண்மைய அறிக்கைகளை கனடா ஆழமான பிரச்னையாகப் பார்க்கிறது. நீதித்துறைச் சுதந்திரம் மிகவும் முக்கியமானது.

அரசியல் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதஉரிமைகள் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாவிட்டால், அடுத்த ஆண்டில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதமர் ஹாப்பர் மிகவும் தெளிவாகவே கூறியுள்ளார்.

இலங்கையின் தலைமை நீதியரசர் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து கனடா உன்னிப்பாக அவதானித்து வருகிறது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

TAGS: