“நஜிப் டாக்டர் மகாதீரைச் சாந்தப்படுத்த வேண்டும் என எண்ணுகிறார்”

“பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு தமது சொந்தக் கருத்துக்களை அமலாக்குவதற்கான ‘வலிமை இல்லாததால்’ அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் முகமட்டின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.”

இவ்வாறு கூறும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த முன்னாள் பிரதமர் மகாதீர் “இன்னும் கட்சித் தலைவர்களை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்” என்றார்.

“நிலைமையைச் சமாளிப்பதற்கான துணிச்சல் நஜிப்புக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆகவே அவர் மகாதீரை சாந்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது,” என அன்வார் இன்று பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

“தமது கொள்கைகளை அல்லது எண்ணங்களை அமலாக்கும் வலிமை அவரிடம் இல்லை.”

தாம் தேர்வு செய்யும் வேட்பாளர்களை அவருக்கு ( மகாதீருக்கு ) பிடிக்கவில்லை என்றாலும் கூட தமது தேர்வை ஆதரிக்க மகாதீர் தயாராக இருப்பதாக கடந்த சனிக்கிழமை அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நிறைவு செய்து வைத்து ஆற்றிய உரையில் நஜிப் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வேண்டுகோள் விடுக்கப்படாமலேயே கட்சிக்கு ஆதரவு தேடுவதற்காக அம்னோ அடி நிலைத் தலைவர்களை மகாதீர் சுயமாகவே சந்தித்து வருகிறார் என்றும் நஜிப் பேராளர்களிடம் கூறினார்.

அன்வார் மேலும் சொன்னார்: “மகாதீர் அம்னோ தலைவர்களையும் மாநிலத் தலைவர்களையும் சொந்தமாகவே அழைத்துப் பேசி வருவது நமக்குத் தெரியும்.”

“அவர்களுடைய ஆதரவை அவர் கோருவதுடன் யோசனைகளையும் கூட வழங்கி வருகிறார்- அவர்கள் மகிழ்ச்சி அடையாவிட்டால்– முதலில் தேர்தலில் வெற்றி பெறுவோம். தேர்தலுக்குப் பின்னர் தலைவரை வீழ்த்துவோம்.”

இது பற்றி கிட்டத்தட்ட எல்லா மாநில அம்னோ தலைவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறிக் கொண்ட அன்வார், நஜிப் அதனைத் தடுக்க இயலாத நிலையில் இருப்பதாகச் சாடினார்.

அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலை ( அவரது குடும்பம் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது) கூட அவரால் துணிச்சலுடன் கட்டுப்படுத்த முடியவில்லை.  ஆகவே அவர் எப்படி மகாதீரைச் சமாளிக்க முடியும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை,” என அவர் தொடர்ந்து கூறினார்.

மகாதீர் பிரதமராக பதவி வகித்த போது துணைப் பிரதமராக இருந்த அன்வார், 1998ம் ஆண்டு அவருடைய அனைத்து அரசாங்க, கட்சிப் பதவிகலிலிருந்தும் நீக்கப்பட்டார்.