‘நஜிப்பும் ரோஸ்மாவும் தீபக்கின் கூற்றை ஏன் மறுக்கவில்லை?’

கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் சுமத்திய குற்றச்சாட்டுகளைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவி ரோஸ்மா மன்சூரும் மறுக்காதது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்.

தீபக் சுமத்திய குற்றச்சாட்டுகளுகு நஜிப்பும் அம்னோவும் பதில்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட சுரேந்திரன், “அவ்விவகாரத்தில் எங்களுக்குத் தொடர்புண்டு என அவர்கள் கதை கட்டிவிடக்கூடாது”, என்றார். 

குற்றம் சாட்டும்படி தீபக்கைத் தூண்டிவிட்டதில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் சம்பந்தமுண்டு என்று அன்வாரின் முன்னாள் உதவியாளர் அனுவார் ஷாரி கூறியதாக இன்றைய நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) செய்தி வெளியிட்டிருப்பது குறித்து வினவியபோது சுரேந்திரன் (இடம்) இவ்வாறு குறிப்பிட்டார்.

அனுவார்,“பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்குக்குக் களங்கம் உண்டாகும்படி நடந்துகொண்டால் தீபக்கின் நிதிப் பிரச்னைகளைத் தீர்ப்பதாக அன்வார் உறுதிகூறினார்”, என்று தெரிவித்ததாக என்எஸ்டி கூறிற்று. 

சுரேந்திரனும் சுபாங் எம்பி சிவரசா ராசையாவும் தீபக்கின் நிறுவனமான அஸ்தானா சங்கே சென்.பெர்ஹாட், ஆவான் மேகா சென். பெர்ஹாட்டுக்கு எதிராக தொடுத்துள்ள வழக்கில் அவரின் நிறுவனத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களாவர்.

கடந்த வாரம் அவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாட்சியமளித்த தீபக், சிலாங்கூர், புக்கிட் ராஜாவில் 223.3-ஏக்கர் (89.332ஹெக்டார்) நிலத்தை ஆவான் மேகாவிடமிருந்து அவரின் நிறுவனத்துக்கு மாற்றிவிடுவதற்கு நஜிப் ஒப்புதல் அளித்தார் என்றார்.

2006, செப்டம்பர் 25-இல் அஸ்தானா செங்கே நஜிப்புக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் அந்த ஒப்புதலுக்கான குறிப்பு உள்ளது என்றாரவர்.

அக்கடிதத்தில், அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப், அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளருக்கு ஒரு குறிப்பு எழுதி நிலத்தை மாற்றிவிட ஆவன செய்யுமாறு பணித்திருந்தார்.

நஜிப்பைச் சந்திக்க ரோஸ்மாதான் ஏற்பாடு செய்தார் என்றும் தீபக் சொன்னார்.

இதனிடையே, திங்கள்கிழமை, அம்னோ-ஆதரவு வலைப்பதிவர் பாப்பா கோமோ (Papa Gomo) இரகசியமாக பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டு யு-டியுப்பில் 2-நிமிட காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்தக் காணொளியில் தீபக், அடையாளம் தெரியாத பலர் முன்னிலையில் அன்வார் இப்ராகிம், சுரேந்திரன், சிவராசா, உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் உள்பட பிகேஆர் தலைவர்கள் பலர் நஜிப், ரோஸ்மா ஆகியோரின் பெயரைக் கெடுப்பதற்குத் தம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் என்று அந்த வலைப்பதிவர் கூறிக்கொண்டார். 

தீபக் பேசுவதற்கு உரை தயாரித்துக் கொடுக்கவில்லை

சுரேந்திரன், தாமும் சிவராசாவும் தீபக்கின் வழக்குரைஞர்கள் மட்டுமே என்றார்.

“வழக்குரைஞர்-கட்சிக்காரர் என்ற அளவில்தான் எங்கள் உறவு.

“நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாக சொல்லும் அவரது முடிவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.

“தீபக் நீதிமன்றத்தில் வாசிப்பதற்கு ‘உரை’ஒன்று எழுதிக்கொடுக்கப்பட்டது என்ற என்எஸ்டி-இன் கூற்று ஒரு அப்பட்டமான பொய்யாகும். அந்த அடிப்படையற்ற செய்தியை வெளியிடுமுன்னர் எங்கள் கருத்துகளைக் கேட்டறியாமல் ஊடக நெறிமுறைகளை முற்றாக அது புறக்கணித்துள்ளது”, என்று சுரேந்திரன் கூறினார்.

கடந்த வாரம் தீபக் சாட்சியமளித்தபோது நீதிபதி சபரியா முகம்மட் யூசுப் பல தடவை குறுக்கிட்டு சம்பந்தமில்லாத விவகாரங்களை நீதிமன்றத்தில் பேச வேண்டாம் என்று தடுத்தார்.

நஜிப்புக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் வழக்கு தொடங்குவதற்குமுன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படவில்லை என்பதால் அதை ஒரு சான்றாதாரமாக அனுமதிக்கவும் அவர் மறுத்தார்.

என்றாலும் கடிதத்தில் உள்ளடக்கத்தை வாய்மொழியாகக் கூற நீதிபதி சபரியா அனுமதித்தார். அதைத்தான் தீபக் நீதிமன்றத்தில் செய்தார்.