கேட் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை ஏமாற்றிய வானொலி நிலையம்

இளவரசர் வில்லியம்ஸின் மனைவி, கேம்ப்ரிட்ஜ் சீமாட்டி கேத்தரின், கர்ப்பமுற்றிருக்கும் நிலையில், அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் இலண்டன் மருத்துவமனையை ஆஸ்திரேலிய வானொலி நிலையம் ஒன்று, அரச குடும்பத்தினரைப் போல நடித்து தொடர்பு கொண்டு, கேத்தரினின் உடல் நிலை குறித்த தகவல்களை வாங்கியதாக மருத்துவமனை ஒப்புகொண்டிருக்கிறது.

இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், லண்டனின் ஏழாம் எட்வர்ட் மன்னர் மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை காலை அரசி போலவும், இளவரசர் சார்லஸ் போலவும் குரலை மாற்றித் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினர்.

அவர்களை பணியிலிருந்த தாதியர் ஒருவருடன் பேச அனுமதித்த நிலையில், அந்த தாதியர் அவர்களுடன் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியின் உடல் நிலை குறித்து சுருக்கமாக விவாதித்தாராம்.

கேத்தரின், திங்கட்கிழமையன்று, மிகக் கடுமையான மசக்கை காரணமாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.