அரசமைப்புச் சட்ட வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி மலேசியாகினியில் தெரிவித்த கருத்துக்கள் சிலாங்கூர் சுல்தானுக்கு எதிராக தேசத் துரோகத்தன்மை உடையவை எனக் கூறப்படுவது மீது தாங்கள் மேற்கொள்ளும் புலனாய்வில் ஒரு பகுதியாக போலீசார் மலேசியாகினி செய்தி இணையத் தளத்தின் மடிக்கணினி ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த புலனாய்வு தொடங்கப்பட்டு ஒராண்டு நிறைவடைந்துள்ள வேளையில் ஷா அலாம் போலீஸ் மாவட்டத் தலைமையகத்தைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் நேற்றுப் பிற்பகல் பங்சாரில் உள்ள மலேசியாகினி அலுவலகத்துக்கு இரண்டாவது முறையாகச் சென்றனர்.
அந்த இருவரும் பாஹாசா மலேசியா பிரிவு ஆசிரியர் முகமட் ஜிமாடி ஷா ஒஸ்மானை 20 நிமிடங்களுக்கு விசாரித்த பின்னர் அப்துல் அஜிஸிடமிருந்து பெறப்பட்ட மின் அஞ்சலை சோதனை செய்வதற்காக அவரது மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் படையின் தடயவியல் பிரிவும் எம்சிஎம்சி என்ற மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமும் அந்த மடிக்கணினியைச் சோதனை செய்யும் என போலீஸ் கூறியது.
அந்த மடிக்கணினி எப்போது திரும்ப ஒப்படைக்கப்படும் என்பது தெரியவில்லை.
2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அப்துல் அஜிஸ் கருத்துக்கள் தேசத் துரோகத்தன்மையைக் கொண்டவை, அமைதிக்கும் ஒழுங்கிற்கும் மருட்டலைத் தரக் கூடியவை என அம்னோ செனட்டர் எஸாம் முகமட் நூர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்தச் செய்தி இணையத் தளமும் அப்துல் அஜிஸும் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னர் அந்தப் பிரச்னையில் சிலாங்கூர் சுல்தான் தலையிட்டது குறித்து கேள்வி எழுப்பும் அறிக்கையை வெளியிட்டதற்காக அப்துல் அஜிஸ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
முன்னாள் விரிவுரையாளரான அப்துல் அஜிஸ் தாம் சபாக் பெர்ணாம் தொகுதிக்கான பிகேஆர் வேட்பாளர் என அறிவித்துக் கொண்டுள்ளார்.
அப்துல் அஜிஸ் அகங்காரமாக நடந்து கொண்டுள்ளதாகவும் சிலாங்கூர் சுல்தான் மீது தெரிவித்த கருத்துக்கள் மூலம் அவர் மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக தேசத் துரோகம் புரிந்துள்ளார் என்றும் எஸாம் கூறிக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எம்சிஎம்சி-யும் போலீசும் அப்துல் அஜிஸ், ஜிமாடி, முன்னாள் பாஹாசா மலேசியா பகுதி ஆசிரியர் வீ இயூ மெங் ஆகியோரை விசாரித்தன.
கடந்த திங்கட்கிழமை வீ மீண்டும் விசாரிக்கப்பட்டார்.