கட்டுப்பாட்டை தாம் இழந்ததாகக் கூறப்படுவதை அம்பிகா மறுக்கிறார்

பெர்சே 3.0 பேரணியின் போது கூட்டத்தினர் மீதான கட்டுப்பாட்டை தாம் இழந்து விட்டதாகக் கூறப்படுவதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். அந்த நிலைக்கு போலீசாரே காரணம் என அவர் சொன்னார்.

கலைந்து செல்லுமாறு தாம் விடுத்த வேண்டுகோளை சிலர் மட்டுமே கேட்க முடிந்த போதிலும் கூட்டத்தினர் மீது தமக்குக் கட்டுப்பாடு இருந்ததாக சுஹாக்காம் நடத்தும் பொது விசாரணையில் அவர் சொன்னார்.

கைத் தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட போதிலும் அவருடைய ஒலிபெருக்கி போதுமான அளவுக்கு சப்தமாக இல்லை என்றாலும் அதனைச் செவிமடுத்த அமால் பிரிவு தொண்டர்கள் வாய்மொழியாக அந்தத் தகவலை பரப்பியதே அதற்குக் காரணம் என்றும் அம்பிகா குறிப்பிட்டார்.

எல்ஆர்டி சேவைகள் தொடர்ந்து இயங்கி, நேரம் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு மணி நேரத்தில் பங்கேற்பாளர்கள் அமைதியாக கலைந்து சென்றிருக்க முடியும் என அவர் நம்புகிறார்.

என்றாலும் பிற்பகல் மூன்று மணி வாக்கில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்து நீரைப் பாய்ச்சிய பின்னர் கட்டுப்பாட்டைத் தாம் இழந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

“நீங்கள் (போலீஸ்) இந்த நிலைமையை உருவாக்கினீர்கள். நீங்கள் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டு வாருங்கள். அது என் வேலை எனச் சொல்ல வேண்டாம்,” என்றார் அவர்.