மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தனியார் துப்பறிவாளர் (பிஐ) பி.பாலசுப்ரமணியம் விவகாரம் மீதான விசாரணையை ஏற்கனவே முடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், புதுத் தகவல் எதுவும் கிடைக்குமானால் முடிந்துபோன விசாரணையைத் தொடரத் தயார் என அது கூறுகிறது.
கடந்த வாரம், கம்பள வியாபாரி தீபக் ஜெய்கிஷன் (இடம்) மலேசியாகினியிடம் வெளியிட்ட தகவல்கள் குறித்து கருத்துரைக்குமாறு கேட்டதற்கு எம்ஏசிசி துணைத் தலைவர் முகம்மட் ஷுக்ரி இவ்வாறு கூறினார்.
மலேசியாகினி நடத்திய நேர்காணலில் பாலசுப்ரமணியத்தை இரண்டாவது சத்திய பிரமாணம் செய்ய வைத்ததில் தமக்கு முக்கிய பங்குண்டு என்பதை தீபக் ஒப்புக்கொண்டிருந்தார்.
அந்த இரண்டாவது சத்திய பிரமாணம், கொலை செய்யப்பட்ட மங்கோலியப் பெண் அல்டான்துயாவுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் தொடர்புண்டு என்று குறிப்பிட்ட முதலாவது சத்திய பிரமாணத்துக்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது. அந்த இரண்டாவது சத்திய பிரமாணத்தை ஏன் செய்ய வைத்தோம் என்று வருத்தப்படுவதாக தீபக் கூறியிருந்தார்.
ஷுக்ரி, பாலசுப்ரமணியத்தின் குற்றச்சாட்டுகள்மீதான எம்ஏசிசி-இன் விசாரணை முடிந்து விட்டதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“விசாரணை கோப்பு அரசு வழக்குரைஞரிடம்(டிபிபி) ஒப்படைக்கப்பட்டது. டிபிபி மேல் நடவடிக்கை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
“விசாரணை முடிவு அதன் (எம்ஏசிசி) நடவடிக்கை பரிசீலனைக் குழுவின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதுவும் டிபிபி-இன் முடிவை ஏற்றது. ஆனால், புதிய சான்றுகள் இருந்தால் அவ்வழக்கை மீண்டும் தொடங்குவதற்கு தயாராகவே உள்ளது”, என்று ஷுக்ரி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்.
தீபக் கூறியவற்றில் புதிய தகவல் எதுவும் உண்டா என்று வினவியதற்கு ஷுக்ரி பதில் அளிக்கவில்லை.