பினாங்குக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள், மொனோ ரயில்: பிரதமர் வாக்குறுதி

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி பெற்றால் பினாங்கு மக்களுக்கு இரண்டு மிகப்பெரிய அன்பளிப்புகளை- கட்டுப்படியான விலையில் 20,000 வீடுகள், ஒரு மொனோ ரயில் சேவை- வழங்குவதாக இன்று உறுதி கூறினார்.

பினாங்கு யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா(யுஎஸ்எம்)வில் ‘வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதைச் சொல்லும் பயணம்’ நிகழ்வைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர், அங்கு  கூடியிருந்த 20,000க்கு மேற்பட்ட மக்களிடம் பத்தாயிரம் வீடுகள் 1மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்ட(பிஆர்1எம்ஏ)த்தின்கீழ் கட்டப்படும் என்றார்.

மீதி 10,000 வீடுகள் ஜேகேபி சென், பெர்ஹாட்,  பினாங்கு வட்டார மேம்பாட்டு வாரியம், தேசிய வீடமைப்பு நிறுவனம் போன்ற அரசாங்க அமைப்புகளால் கட்டப்படும். நஜிப், மாற்றரசுக் கட்சி ஆளும் பினாங்கு மக்களுக்கு ஒரு நாள் வருகை மேற்கொண்டிருக்கிறார்.

“அவ்வீடுகள் சந்தை விலைக்கும் குறைவாக பினாங்கு மக்களுக்கு விற்கப்படும். சந்தையில் வீட்டின் விலை ரிம500,000 என்றால் நாங்கள் ரிம300,000-த்துக்குத்தான் விற்போம்”, என்றாரவர். அந்நிகழ்வில் அமைச்சர்கள் கோ சூ கூன், நோர் முகம்மட் யாக்கூப், டாக்டர் இங் யென் யென் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

டிஏபி ஆட்சீயில் உள்ள மாநில அரசு, அம்மாநில மக்களின் வீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது. கட்டுப்படியான விலை வீடுகளையோ குறைந்த விலை வீடுகளையோ அது கட்டித்தரவில்லை.

பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படும்

போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் அத்தீவுக்கு மொனோ ரயில் சேவை ஒன்றும் தேவை என்றாரவர்.

“பினாங்கு மக்கள் போக்குவரத்து நேரிசலில் சிக்கி அவதிப்படுவதை அறிவோம். அம்மாநிலத்தில் பிஎன் வெற்றிபெற்றால் கோலாலும்பூரில் உள்ளதைப் போன்ற எல்ஆர்டி சேவையை அமைத்துக் கொடுப்போம்”.

பினாங்கு மக்கள் மேம்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவையைப் பெறும் தகுதி உள்ளவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் பிஎன்னுக்கு ஆளும் அதிகாரத்தை வழங்கினால் அவர்களின் கனவு நனவாகும் என்றார்.

-பெர்னாமா