பினாங்கு மக்களுக்கு நஜிப்பின் தேர்தல் வாகுறுதிகளைச் சாடுகிறது டிஏபி

பினாங்கில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்த தேர்தல் வாக்குறுதிகளைச் சாடிய டிஏபி புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர் லியு சென் தோங், அது ஒன்றும் மத்திய அரசாங்கம் செய்யும் சலுகை அல்ல என்றார். பினாங்கு தேசிய கருவூலத்துக்கு வழங்கும் பணத்திலிருந்து அத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்பதால் அப்படிப்பட்ட திட்டங்களை மேற்கொள்வது மத்திய அரசின் கடப்பாடாகும்.

“பிரதமர் அறிவித்தவை மத்திய அரசின் நிதிஆதாரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கூட்டரசு அரசாங்கத் திட்டங்கள். அவற்றை மாநிலத்தை ஆள்வது யார் என்று பாராமல் உடனடியாக அமல்படுத்துவதுதான் முறையாகும்.

“பினாங்கு மக்கள் நேரடி வரி என்ற வகையில் குறைந்தது ரிம3 பில்லியனை ஆண்டுதோறும் வழங்குகிறார்கள்; அதில் ரிம100 மில்லியன் மட்டுமே மான்யமாக திரும்பி வருகிறது”என்று லியு கூறினார்.

இன்று பினாங்கு யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியாவில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட நஜிப், பினாங்கு பக்காத்தான் அரசு, “மாநில மக்களின் வீட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது. கட்டுப்படியான விலை வீடுகளையோ குறைந்த விலை வீடுகளையோ அது கட்டித்தரவில்லை”,என்று கூறினார்.

பினாங்கில் பிஎன்னை வெற்றிபெற வைத்தால் அம்மாநில மக்களுக்கு கட்டுப்படியான விலையில் 20,000 வீடுகளைக் கட்டித்தருவதாகவும் ஒரு மொனோ ரயில் சேவையை வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

அது ஒருவகை “தேர்தல் மிரட்டல்” என்றுரைத்த லியு, வீடமைப்பு மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது அது மாநில அரசின்கீழ் வராது என்பதை பிரதமருக்கு நினைவுறுத்தினார்.

மொனோரயில் ஒரு பழைய பல்லவி

மொனோ ரயில் பற்றிக் குறிப்பிட்ட லியு, அதுவும் ஒரு பழைய பல்லவிதான் என்றார். 2006-இலேயே முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி பினாங்குக்கு மொனோ ரயில் வரும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

“நஜிப்பும் 2010-இல் 10வது மலேசிய திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது பினாங்கின் ரெப்பிட் சேவைக்கு 200 புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்றார்.

“இன்றுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. (பினாங்குக்கு) ஒதுக்கப்பட்ட  பேருந்துகள் குவாந்தானுக்கு ‘கடத்தப்பட்டதாக’ கூறப்படுகிறது”.

பினாங்கு பிஎன் மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்களைக் காண்பித்து பினாங்கு வாக்காளர்களை மிரட்டக்கூடாது என்று லியு குறிப்பிட்டார்.

“பினாங்கு பாரிசான் நேசனல், சொந்த காலில் நின்று மாநில கொள்கைகளை வைத்து பினாங்கு பக்காத்தானுடன் மோத வேண்டும். கூட்டரசு அரசாங்கத்தின் பண வலிமையைக் காண்பித்து வாக்காளர்களை மிரட்டக்கூடாது”, என்றாரவர்.