முஸ்லிம் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட அண்மைய விவகாரங்களில் தவறு செய்துள்ள ஊராட்சி மன்ற ‘சதிகாரர்கள்’ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பக்காத்தான் ராக்யாட்டுக்குள் உறவுகள் சீர்குலைவதைத் தவிர்ப்பதற்கு அது அவசியம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
பாஸ் ஆட்சி புரியும் கிளந்தானில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்ட பல அண்மைய சம்பவங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
அந்தப் பிரச்னைகளைத் தீர்க்குமாறு தாம் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“நான் என் கவலையை முஸ்தாபா அலியிடம் தெரிவித்துள்ளேன். அவர் அந்த விவகாரத்தைப் பரிசீலித்து தீர்ப்பதாக உறுதி அளித்துள்ளார்.”
“பக்காத்தானுக்குள் நிலவும் வலுவான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் சீர்குலையாமல் தவிர்ப்பதற்கு அந்த விவகாரத்தை கடுமையாக எடுத்துக் கொண்டு முடிவு காண வேண்டும் என்றும் நான் முஸ்தாபா அலியிடம் தெரிவித்துள்ளேன்,” என்றார் லிம்.
“முஸ்லிம் அல்லாதார் இஸ்லாமியச் சட்டங்களுக்கு உட்படுத்தப்படுவதாக கூறப்படும் அந்த பிரச்னைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு பாஸ் தலைமைத்துவத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் நான் டிஏபி புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங்-கிற்கும் பணித்துள்ளேன்,” என இன்று விடுத்த ஒர் அறிக்கையில் லிம் தெரிவித்தார்.
உடனடித் தீர்வு காணப்படாவிட்டால் பக்காத்தான் ராக்யாட்டுக்குள் ஒத்துழைப்பை அது கீழறுப்புச் செய்து விடும் என்றும் சமயச் சுதந்திரத்துக்கு அது அளித்துள்ள வாக்குறுதி பலவீனமாகி விடும் என்றும் அவர் சொன்னார்.
நாகரீகமற்ற நடத்தைக்காக கோத்தா பாரு நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு குற்றப்பதிவுகளை வழங்கியுள்ளதாக இன்று வெளிவந்துள்ள செய்திகளை அவர் சுட்டிக்காட்டினார்.
முதலாவது சம்பவத்தில் இரவு நேரத்தின் போது நிறுத்தப்பட்டிருந்த தங்கள் வாகனத்திலிருந்து சுல்தான் இஸ்மாயில் பெத்ரா விமான நிலையத்தில் இருந்த விமானங்களை பார்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் அல்லாத இருவருக்கு நாகரீகமற்ற நடத்தைக்காக குற்றப்பதிவுகள் கொடுக்கப்பட்டன. அவர்கள் இருவரும் அந்தக் குற்றத்தை மறுத்துள்ளனர்.
பகல் நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த பதின்ம வயது ஜோடி ஒன்றுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டது இரண்டாவது சம்பவமாகும்.
முதலாவது சம்பவத்தில் 500 ரிங்கிட்டுக்கு ‘அந்த விவகாரத்தைத் தீர்க்க’ அதிகாரிகள் முன் வந்ததாகக் கூறப்பட்டுள்ளதால் ஊழலுக்கு எதிராக கிளந்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்றும் லிம் சொன்னார்.
நகராட்சி மன்ற அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பது தெளிவாகும்.
கிளந்தான் அரசாங்கம் தூய்மையான ஊழல் இல்லாத அரசாங்கம் என்ற நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும் இஸ்லாமியச் சட்டங்களை கட்டாயமாகத் திணிப்பதின் மூலம் முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகள் மதிக்கப்படவில்லை என்ற கவலையைப் போக்கவும் உடனடி நடவடிக்கை அவசியம் என பினாங்கு முதலமைச்சருமான லிம் மேலும் கூறினார்.
நாகரீகமற்ற நடத்தைக்காக கொடுக்கப்பட்ட அந்த குற்றப்பதிவுகளை கல்வாத் குற்றத்துக்காக வழங்கப்பட்டவை என்றும் முஸ்லிம் அல்லாதார் மீது ஷாரியா சட்டத்தை அமலாக்கும் முயற்சி அது என்றும் திசை திருப்பி செய்திகளை வெளியிடும் ஊடகங்களையும் அவர் சாடினார்.