நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என்கிறது டிஏபி

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை அந்த லைனாஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதைத் தொடர்ந்து அது அமைவதற்கு அனுமதி அளிப்பதில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட நான்கு அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும் என டிஏபி சொல்கிறது.

அந்தத் தொழில் கூடத்தின் கழிவுகளை ஏற்றுமதி செய்ய முடியாது என்பதை லைனாஸ் ஒப்புக் கொண்டு அது அறிக்கை விடுத்துள்ளது, பொதுச் சுகாதாரம், பாதுகாப்பு மீது பிஎன் அக்கறை காட்டவில்லை என்பதைக் காட்டுவதாக டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாபா முகமட், அறிவியல் பசுமைத் தொழில் நுட்ப அமைச்சர் மாக்ஸிமுஸ் ஜானிட்டி ஒங்கிலி, இயற்கை வள, சுற்றுச் சூழல் அமைச்சர் டக்ளஸ் உங்கா எம்பாஸ் , சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையை லிம் சுட்டிக் காட்டினார்.

அந்த அறிக்கையின் மூன்றாவது பத்தி பின் வரும் சொற்றொடர்களைக் கொண்டுள்ளது: “தற்காலிக நடவடிக்கை அனுமதி வெளியிடப்படுவதற்கு முன்னதாக கெபெங்கில் உள்ள தனது தொழில் கூடத்திலிருந்து வெளியாகும்எந்தக் கழிவுப் பொருளும் அதன் மூல வளத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் என உத்தரவாதக் கடிதம் ஒன்றை லைனாஸ் வழங்க வேண்டும்.”

லைனாஸ் தொழில் கூட நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பின்னர், அனைத்துலகச் சட்டங்கள் காரணமாக கழிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது என லைனாஸ் மலேசியா நிறுவன நிர்வாக இயக்குநர் மாஷால் அகமட் கூறியுள்ளார்.

பொன்னான வாய்ப்பு

கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை லைனாஸ் நிறுவனம் கொடுக்கும் வரையில் அதன்தற்காலிக நடவடிக்கை அனுமதியை நிறுத்தி வைப்பதற்கு பொன்னான வாய்ப்பை அந்த நிலைமை வழங்கியுள்ளதாகவும் லிம் தெரிவித்தார்.

“பிஎன் தனது சேவகர்கள் ஆதாயம் அடைவதை விரும்பி மக்கள் நலன்களைப் பாதுகாக்கத் தவறினால் புத்ராஜெயாவைக் கைப்பற்றும் போது பக்காத்தான் ராக்யாட் அதனைச் செய்யும்,” என அவர் தொடர்ந்து கூறினார்.

TAGS: