உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு சூடானில் சிறை பிடிப்பு

கர்த்தூம்:இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, பிணம் தின்னி கழுகு, சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்துக்கு, ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு, ஆயுத சப்ளை செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதற்கிடையே, சூடான் நாட்டின் டார்பர் நகரில், பிணம் தின்னி கழுகு பறந்தது. இதை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் பிடித்து வைத்துள்ளனர். இந்த கழுகின் கால்களில், சூரிய சக்தியால் இயங்கும் சாதனமும், ஜி.பி.எஸ்., சாதனம் ஒன்றும் கட்டப்பட்டு உள்ளது. இந்த கழுகு மூலம், இஸ்ரேல் உளவு பார்த்துள்ளதாக, சூடான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

‘பறவை இனத்தை பாதுகாக்க, அது எங்கெல்லாம் செல்கிறது, என்பதை கண்காணிக்கவே, ஜி.பி.எஸ்., சாதனம் பொருத்தப்பட்டு உள்ளது. உளவு பார்க்கும் திட்டத்தோடு அந்த சாதனங்கள் இணைக்கப்படவில்லை’ என, இஸ்ரேல் பறவை துறை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். தேவையில்லாத பிரச்னைகளை எழுப்பாமல் பறவை நிபுணர்கள் சொல்வதை கேட்கும்படி சவுதி அரேபியாவும் வற்புறுத்தி உள்ளது.