தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம்!

அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையில் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யுசுப் வலியுறுத்தியதாக மலேசியன் இன்சைடர்  நேற்று வெளியிட்ட செய்தி கூறுகிறது.

“தேர்தல் ஆணையத்தின் எந்த ஓர் அதிகாரியும் அரசியல் கட்சிகளில் சேர்வதில் தவறு ஏதும் இல்லை. அவர்கள் பாஸ், பிகேஆர் அல்லது அம்னோவில் இருக்கலாம். அதில் பிரச்னை இல்லை.

“அது அவர்களின் ஜனநாயக உரிமை”, என்று அப்துல் அசிஸ் கூறியதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, சாபா பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் லாஹிருல் சாபா தேர்தல் ஆணையத்தில் அம்னோ உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் பதவி வகிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டிருந்தார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடாது. ஏனென்றால் இந்நாட்டில் ஜனநாயக அமைவுமுறையை அமலாக்கம் செய்ய வேண்டிய பொறுப்புடைய ஓர் அமைப்பு என்ற முறையில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்று லாஹிருல் கூறினார்.

சாபா, கினாபாத்தாங்கான் அம்னோ தகவல் பிரிவு தலைவர் அஹ்சியா நாஸ்ரா அரசியலில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபாடு கொண்டிருக்க விரும்பினால் அவர் சாபா தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கான துணை இயக்குனர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அஹ்சியா அம்னோ அல்லது தேர்தல் ஆணையம் ஆகியவற்றில்   வகிக்கும் ஏதேனும் ஒரு பதவியிலிருந்து  விலக வேண்டும் என்று லாஹிருல் இன்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அவர் (அஹ்சியா) பதவி துறக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தை நாம் நம்ப முடியாது.

“பாரபட்சமான அனைத்துக் கூறுகளும் அகற்றப்பட வேண்டும். இப்படிப்பட்டவர்கள் இருக்கிறவரையில், அதாவது தேர்தல் ஆணையத்தில் அம்னோ உறுப்பினர்கள், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறையும்”, என்று லாஹிருல் பாஸ் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

TAGS: