பிகேஆர்: நாடற்றவர் பேரணியில் நடந்தது பற்றி ஹிஷாமுடின் கூறியிருப்பது அப்பட்டமான பொய்

1rallyநேற்றைய பேரணியில் நாட்டற்ற இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்குத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருப்பது ஓர் “அப்பட்டமான பொய்” என்கிறது பிகேஆர்.

“புத்ரா ஜெயா தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) (நேற்று) 308 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அவற்றில் 280 நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு செய்யப்பட்டவை என்று ஹிஷாமுடின் கூறினார்.

“இது அப்பட்டமான, பொறுப்புற்ற முறையில் சொல்லப்பட்ட ஒரு பொய். அவர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு எந்த  விண்ணப்பமும் செய்யவில்லை”, என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

நேற்று பிகேஆர், மலேசியாவில் பிறந்து நாடற்றவர்களாக இருப்போருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து புத்ரா ஜெயாவில் ஒரு பேரணி ஏற்பாடு செய்திருந்தது. முடிவில் என்ஆர்டி, பேரணியில் கலந்துகொண்ட நாடற்றவர்களுக்கு  மைகார்ட் விண்ணப்பப் பாரங்களைக் கொடுக்க முன்வந்தது.

நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஹிஷாமுடின், பேரணியில் குடியுரிமை பற்றிய விவகாரமே எழவில்லை என்றார். அதில் கலந்துகொண்டவர்கள் நிரந்தர வசிப்பிடத்தகுதி கேட்டுத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று கூறிய அவர் பெரும்பாலோர் தங்களிடமுள்ள சிவப்பு மைகார்டுகளை நீலநிற மைகார்டுகளாக மாற்றிக்கொள்ள விண்ணப்பித்தார்கள் என்றார்.