சியோல்: அண்டை நாடுகளின் எதிர்ப்பை மீறி, வட கொரியா, நேற்று, ராக்கெட்டை விண்ணில், வெற்றிகரமாக ஏவியது. சட்டவிரோதமாக, அணு ஆயுதம் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா இடம் பெற்றுள்ளன. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும், நீண்ட நாட்கள் சண்டை நடந்தது. ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள், வடகொரியா ராக்கெட் தயாரிப்பதை எதிர்த்தன.
ஐ.நா.,சபையிலும், ‘வடகொரியா ராக்கெட் தயாரிக்கக்கூடாது’ என, 2009-ல், தீர்மானம் இயற்றப்பட்டது. அமெரிக்காவின் ரவுடி நாடுகளின் பட்டியலில், ஈரான், வடகொரியா, கியூபா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. எனவே, வடகொரியாவின் ராக்கெட் திட்டத்தை அமெரிக்காவும் எதிர்த்தது.
செயற்கை கோளை ஏவுவதற்காக, நீண்ட தூரம் செல்லக்கூடிய ராக்கெட்டுகளை தயாரிப்பதாக, வட கொரியா தெரிவித்தது. “ஏவுகணை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வடகொரியா தயாரிக்கும் ராக்கெட்டுகள், அண்டை நாடுகளை தாக்கும் உள்நோக்கம் கொண்டவை என, ஜப்பானும், வட கொரியாவும் கருத்து தெரிவித்தன.
இதற்கிடையே, ‘க்வாங்மையாங்சாங்-3’ என்ற செயற்கை கோளை சுமந்து, வடகொரிய ராக்கெட் நேற்று, விண்ணுக்கு சென்றது. “எங்கள் நாட்டு வான்வழியாக, இந்த ராக்கெட் சென்றால் அதை சுட்டு வீழ்த்துவோம்” என, ஜப்பான் எச்சரித்திருந்தது.
கடந்த வாரம் ஏவுவதாக இருந்த இந்த ராக்கெட், தொழில்நுட்ப காரணம் காரணமாக, இம்மாதம், 29ம்தேதி ஏவப்படும், என வடகொரியா அறிவித்திருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவும் ஏவுகணை தடுப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்திருந்தது. ஆனால், இந்த ராக்கெட் ரகசியமாக, நேற்று காலை, 9.50-க்கு ஏவப்பட்டது. வடகொரியாவின் இந்த செயலுக்கு, ஐ.நா., பொதுச் செயலர், பான் கீ மூன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.