தீபாக்: பாலாவின் சத்தியப் பிரமாண விவகாரத்தில் பிரதமருக்கு பெரும் பங்கு இருந்தது

தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் முதல் சத்தியப் பிரமாணம் 2008 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதில் பிரதமர் நஜிப் ரசாக் மிகப் பெரும் பங்காற்றினார் என்று வணிகர் தீபாக் ஜைகிஷன் கூறுகிறார்.

Deepak-Rosmah bookநஜிப் அவ்வாறு செய்தது ஏனென்றால் அம்னோவிலிருந்த அவரது விரோதிகள் அவரின் பிரதமராகும் இலட்சியத்தை தடுக்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளைத் தடுப்பதற்காகும் என்று தீபாக் ஹரக்காவுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார். இந்த நேர்காணல் யுடியூப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நஜிப் அவ்வாறு செய்தார் ஏனென்றால் அம்னோவிலிருந்த அவரது விரோதிகள் அவரின் பிரதமராகும் இலட்சியத்தை தடுக்க மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளைத் தடுப்பதற்காகும் என்று தீபாக் ஹரக்காவுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார். இந்த நேர்காணல் யுடியூப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.x

“நஜிப் பிரதமர் ஆவதை விரும்பாத கூட்டம் ஒன்று அம்னோவில் இருந்தது. அவர்கள் தங்களுடைய சொந்த திட்டத்தை கொண்டிருந்தனர். அவர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

“அக்கூட்டத்தைச் சார்ந்த ஒருவர் சத்தியப் பிரமாணத்தின் மூலம் இக்கொடூரச் செயலைச் செய்தது யார் என்று விளக்கி, அதற்கான உத்தரவை இட்டவரை அடையாளம் காட்ட இருந்தார். இது உயர்மட்ட நிலையில் இருந்தது”, என்று தீபாக் கூறினார்.

அக்கட்டத்தில், நஜிப் துணைப் பிரதமராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஏற்றப்பட்ட பின்னடைவுக்கு அப்துல்லா அஹமட் படாவி பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற வற்புறுத்தலைத் தொடர்ந்து அவர் பதவி துறந்தார். அதன் பின்னர், நஜிப் ஏப்ரல் 2009இல் பிரதமரானார்.

பாலசுப்ரமணியத்தின் முதல் சத்தியப் பிரமாணம் கொல்லப்பட்ட மங்கோலிய பெண் அந்தான்துயாவுடன் நஜிப் தொடர்பு வைத்திருந்தார் என்று கூறியது.

நஜிப்பின் வீட்டில் சந்திப்பு

அடுத்து, பாலசுப்ரமணியம் இன்னொரு சத்தியப் பிரமாணத்தில் தாம் தமது முதலாவது சத்தியப் பிரமாணத்தில் கூறியிருந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறினார்.

“இதன்படி, சத்தியப் பிரமாணத்தை மாற்றியது அவர்கள் பாலாவை கண்டு பயந்தனர் என்பதற்காக அல்ல. அதன் முக்கியமான நோக்கம் அதைவிடப் பெரியதாகும். அவர்கள் (அந்த இன்னொரு கூட்டத்தின்) அடுத்த நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

“அன்றிரவே, நாங்கள் அதை (புதிய சத்தியப் பிரமாணத்தை) தயார் செய்ய வேண்டும். நாங்கள் (பாலசுப்ரமணியத்தை) கட்டாயப்படுத்தி முற்றிலும் மாற்றியாக வேண்டும். நாங்கள் (அந்த விவகாரத்தை) தீர்த்தாக வேண்டும். அதுதான் பிரச்னை”, என்று தீபக் அப்போதைய அவசரச் சூழ்நிலையை வலியுறுத்தினார்.

ஜூலை 3, 2008 மாலையில் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரிடமிருந்து தமக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக தீபக் கூறினார்.

அன்று காலையில் அவரது முதல் சத்தியப் பிரமாணத்தை வெளியிட்ட பாலசுப்ரமணியத்தை தமக்குத் தெரியும் என்பதால் ரோஸ்மா தமது உதவியை நாடினார் என்றார் தீபக்.

அதனைத் தொடர்ந்து, தாம் நஜிப்பின் அதிகாரப்பூர்வமான புத்ராஜெயா இல்லத்திற்குச் சென்று பாலசுப்ரமணியத்துடன் மேற்கொண்ட முதல் சந்திப்பு அவர் உதவுவதற்கு விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது என்று நஜிப்பிடம் தெரிவித்ததாக தீபக் கூறினார்.

“அவர் (நஜிப்) ஒரு வழக்குரைஞரையும், பின்னர் வழக்குரைஞரான அவரது சகோதரரையும் அழைத்தார். (சிறிய) விவாதத்திற்குப் பின்னர், அவர் (நஜிப்) அவரை (பாலாவை) சந்தித்து சத்தியப் பிரமாணத்தை மீட்டுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டார்.

“நான் பாலாவை அழைத்தேன்…அவர் சத்தியப் பிரமாணத்தை மீட்டுக்கொள்ள வேண்டும் என்றால், அவர் டத்தோ ஸ்ரீயையும், டத்தின் ஸ்ரீயையும் சந்திக்க வேண்டும் என்றார்”, என்று தீபக் கூறினார்.

“எம்எசிசி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்

கட்டடக் கலைஞரும் வணிகருமான தமது இளைய சகோதரர் நஜிம் தம்மை பிரதிநிதிக்க வேண்டும் என்று நஜிப் ஒரு முன்மொழிதலைச் செய்தார் என்று தீபக் கூறினார். அதன் பின்னர், கிட்டத்தட்ட நள்ளிரவில் டாமன்சாராவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் அச்சந்திப்பு நடந்தது.

ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் அறிவிக்கப்படாத தொகையும் அடங்கும். நஜிம், நஜிப்பை அழைத்து இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வரைவதற்கு ஒரு வழக்குரைஞரை கோலாலம்பூரிலுள்ள ஒரு முதல்தரமான ஹோட்டலில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

தீபாக் கூறிய அந்த வழக்குரைஞரின் பெயரை வீடியோவில் ஒலிக்கவிடாமல் ஹராக்கா செய்திருந்தது.

அதன் பின்னர், அடுத்த நாள் ஒரு செய்தியாளர் கூட்டத்திற்கு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வழக்குரைஞர் அந்த கூட்டத்தில் இருக்க விரும்பவில்லை. அவர் தமது வழக்குரைஞரான நண்பரை பாலசுப்ரமணியத்துடன் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்தார் என்றார் தீபாக்.

மலேசிய ஊழல்-எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) நடவடிக்கை எடுத்து அதன் நற்பெயரை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தாம் இத்தகவலை வெளியிடுவதாக தீபாக் கூறினார்.

“எம்எசிசியில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது நிச்சயம். அனைவரும் அந்தத் தம்பதியினரிடமிருந்து மட்டுமே உத்தரவைப் பெறுகின்றனர் என்பது சாத்தியமில்லை. மலேசியாவில் 28 மில்லியன் மக்கள் இருக்கின்றனர்”, என்றாவர்.