ஆப்கானுடன் இந்தியா பாதுகாப்பு உடன்படிக்கை

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கான் குடியரசுத் தலைவர் இந்திய தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இந்தியா ஆப்கானிஸ்தானிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குரிய முக்கிய கூட்டுறவு ஒப்பந்தத்தில் இவ்விருநாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியா வந்துள்ள ஆப்கானிய குடியரசுத் தலைவர் ஹமீத் கர்சாயைச் சந்தித்து உரையாடியப் பின்னர் கருத்து வெளியிட்ட இந்தியப் தலைமையமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங், தமது பிராந்தியத்தைப் பீடித்துள்ள பயங்கரவாதம் தொடர்பில் ஒளிவுமறைவு இல்லாத விவாதங்களையும் விவரங்களையும் கர்சாயுடன் தான் பகிர்ந்துகொண்டதாகக் கூறினார்.

பிராந்தியத்தில் அமைதியையும் சமாதானத்தையும் மேம்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகள் எடுத்துவருவதாகக் கூறி கர்சாய் நன்றி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு பெருமளவில் உதவி வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தாதுப் பொருள் வர்த்தகம், ஹைட்ரோகார்பன் உற்பத்தி போன்றவை தொடர்பில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளன.

இந்தியாவின் நெடுநாள் வைரியான பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தான் பாராட்டிவந்த உறவு, அண்மையில் ஆப்கானிஸ்தானில் வரிசையாக நடந்த தாக்குதல்களை அடுத்து கணிசமாக மோசமடைந்துள்ளது.

TAGS: