அண்மையில் தங்களை வாக்காளர்களாக பதிவுசெய்துகொண்ட காராக்கில் உள்ள புதிய வாக்காளர்கள் பலர் வேறு தொகுதிகளில் வாக்களிக்கப் பதியப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இங்கு தாமான் முஹிபா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சோங் மற்றும் அவரது இரு மகன்கள் இவ்வாண்டு ஆரம்பத்தில் தங்களை வாக்காளர்களாக அஞ்சல் நிலையத்தில் பதிவு செய்துகொண்டதாகவும் சில மாதங்கள் கழித்து காராக் தேசிய முன்னணியிடமிருந்து, அவர்கள் கெத்தாரி என்ற தொகுதியில் வாக்களிக்க கடிதம் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
“எனது குடும்பத்தில் அனைவரும் காராக் முகவரியை கொண்டுள்ளோம். நானும் எனது மற்ற 4 பிள்ளைகளும் காராக் சாபாய் தொகுதியில் தான் வாக்களிக்கிறோம். இந்த ஆண்டு பதிவு செய்த என் 2 மகன்கள் மட்டும் ஏன் கெத்தாரி தொகுதியில் வாக்களிக்க வேண்டும் என்று வினவிய சோங், இது தேர்தல் ஆணையம் தெரிந்தே செய்யும் சதி வேலையாக இருக்கும் என சந்தேகம் வெளியிட்டார்.
நடுநிலையாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம், ஆளும் தேசிய முன்னணியின் கைக்கூலியாக செயல்படுவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. ஆகவே, தொகுதிகள் மாற்றப்பட்டுள்ள இந்த இரண்டு வாக்காளர்களையும் உடனடியாக தங்களின் அடையாள அட்டை முகவரியான சாபாய் தொகுதிக்கு மாற்றம் செய்யவேண்டும் என்றும் வாக்களிக்கும் மக்களுடன் தேசிய முன்னணி தனது அரசியல் விளையாட்டை விளையாடக்கூடாது எனவும் என சோங் கேட்டுக்கொண்டார்.
2008-பொதுத் தேர்தலில் 145 வாக்கு வித்தியாசத்தில் ஜசெக வெற்றி வாய்ப்பை இழந்தது என்பது அனைவரும் அறிந்ததே. வரும் பொதுத் தேர்தலில் சாபாய் தொகுதியை ஜசெக கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எனினும், தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று ஜசெக தேசிய மகளிர் அணியின் துணைச் செயளாலர் திருமதி காமாட்சி, செம்பருத்தியிடம் கூறினார்.
காராக்கில் பிறந்து காராக்கிலேயே வாழும் இந்த இளைஞர்கள் சாபாய் தொகுதியில் வாக்களிப்பதுதான் அவர்களின் உரிமையாகும். அப்படியிருக்கும்போது வேறு தொகுதியில் அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்வது எந்த வகையில் நியாயம் என அவர் வினவினார்.
நேர்மையாக தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வதே மானிட தர்மம். அதைவிடுத்து பித்தலாட்டம் செய்து வெற்றி பெற்று மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றுவதை இனியும் காரக் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் எனக் கூறிய காமாட்சி, இவ்விவகாரம் குறித்து பெர்சே தலைவர் அம்பிகாவின் அவர்களின் பார்வைக்கு கொண்டுச் செல்லப்போவதாகவும் கூறினார்.
காராக் தொகுதியுள்ள வாக்காளர்கள் தாங்கள் எந்த தொகுதி வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதை இணையம் மூலம் அறிந்து கொள்ள தன்னை தொடர்பு கொள்ளலாம் என காமாட்சி கூறினார்.