போலீஸ் தடுப்புக் காவல் கைதி ஏ குகன் சடலம் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்னர் குடும்ப உறுப்பினர்களிடம் அது இருந்த போது சேதப்படுத்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக துணை தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் இரண்டாவது சவப் பரிசோதனை அறிக்கை மீது போலீஸ் கருத்துரைக்கவுமில்லை, அதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவருமான காலித் சொன்னார். மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தில் அந்த இரண்டாவது சவப்பரிசோதனை நடத்தப்பட்டது.
“சடலம் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் சவ ஊர்வலத்தின் போதும் அந்தச் சடலத்திற்கு ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும். நாங்கள் அந்தச் சடலம் குடும்பத்தாரிடம் இருந்த போதும் சவ ஊர்வலத்தின் போதும் சடலத்தை பின் தொடரவில்லை. எங்களுக்கு அது தெரியாது.”
“அதனால்தான் போலீசார் இரண்டாவது சவப் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கவும் இல்லை. அது பற்றிக் கருத்துக் கூறவுமில்லை,” எனத் தமக்கும் போலீஸுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக குகன் குடும்பம் தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் வழக்கில் சாட்சியமளித்த போது காலித் அவ்வாறு கூறினார்.
முதல் சவப் பரிசோதனையில் 22 காயங்களை தடயவியல் நிபுணர் பட்டியலிட்டுள்ளதை குகன் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் சிவராசா ராசய்யா சுட்டிக்காட்டிய போது அதுதான் கண்டு பிடிப்பு என்பதை காலித் ஒப்புக் கொண்டார்.
“என்றாலும் நாம் முதல் சவப் பரிசோதனை முடிவுகளையும் இரண்டாவதின் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்த மட்டில் நாங்கள் மரணத்துக்கு நுரையீரலில் நீர் இருந்தது காரணம் எனக் கூறப்பட்ட முதல் அறிக்கையை சார்ந்திருப்போம்,” என்றார் அவர்.
குகன் சடலம் குடும்பத்தாரிடம் இருந்த போது ஏதாவது செய்யப்பட்டிருக்கலாம் என அவர் சொல்வது இதுதான் முதன் முறை என சிவராசா காலித்திடம் சொன்ன போது அதனை காலித் ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி வி டி சிங்கம் காலித்திடம் இவ்வாறு வினவினார்: “நீங்கள் ஏதோ குளறுபடி இருப்பதாக சந்தேகப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் போலீசில் புகார் செய்யவில்லை அல்லது மேலும் விசாரிக்கவில்லை ?”
“உங்களுக்கு மரியாதை தருகிறேன். அது புகார் செய்யப்பட வேண்டும் அல்லது மேலும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.”
ஆனால் அதற்கு காலித் பதில் அளிக்கவில்லை.
இரண்டாவது சவப் பரிசோதனை நிகழ்ந்த போது மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மய்யம் குகன் உடம்பில் 45 காயங்களைக் கண்டு பிடித்தது. அடிக்கப்பட்டதால் முக்கிய உறுப்புக்கள் செயலிழந்தது மரணத்துக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கில் முறையாக சோதனைகள் நடத்தவும் நேர்மையான அறிக்கையை தயாரிக்கவும் தவறியதற்காக மலேசிய மருத்துவ மன்றம் முதலாவது சவப் பரிசோதனை அறிக்கையைத் தயாரித்த நோய்க் கூறு நிபுணர் டாக்டர் அப்துல் கரீம் தாஜுடினைக் கண்டித்துள்ளது.
போலீசார் இரண்டவது சவப்பரிசோதனையை ஆட்சேபித்தனர்
இரண்டவது சவப்பரிசோதனையைப் போலீசார் ஆட்சேபித்ததாகவும் காலித் நீதிமன்றத்தில் கூறினார். அந்தத்தகவலை அப்போதைய சுபாங் ஜெயா ஒசிபிடி ஜைனல் ரஷிட் தம்மிடம் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
“குடும்பத்தினர் சடலத்தை எடுத்துச் சென்று விட்டனர் என்றும் முதலாவது சவப் பரிசோதனை அறிக்கை கொடுக்கப்பட்டு விட்டதால் இரண்டவது சவப்பரிசோதனை நடத்தப்படக் கூடாது என்றும் ஜைனல் கூறினார்.
அதுதான் எடுக்கப்பட்ட நிலையாகும். நான் அந்த முடிவை ஆதரித்தேன்,” என சிவராசாவுக்குப் பதில் அளித்த போது காலித் சொன்னார்.
“அத்துடன் என்ன செய்யப்பட வேண்டும் என்பது மீது மேல் உத்தரவுகளுக்காக ஜைனல் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இரண்டாவது சவப் பரிசோதனையை நாங்கள் விரும்பவில்லை என்பதே எங்கள் நிலையாகும்.”
என்றாலும் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படுவதற்கு சட்டத்துறைத் தலைவர் அனுமதி அளித்ததால் போலீசார் பின்னர் அதற்கு இணங்கியதை காலித் ஒப்புக் கொண்டார். அதற்கு முன்னர் குகன் குடும்பத்தினர் புக்கிட் அமானில் ஆர்ப்பாட்டம் நடத்தி இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் கடிதத்தை சமர்பித்து நெருக்குதல் கொடுத்தனர்.