மலேசியர் அனைவருக்குமான தலைவர் என்று கூறிக்கொள்ளும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிளந்தான், போஸ் பிஹாய் ஓராங் அஸ்லி மக்களின் துயர்தீர்க்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ.
அக்டோபர் 23-இல், எஸ்கே பிஹாயில் உணவுக்குப் பின்னர் இஸ்லாமிய தொழுகையில் கலந்துகொள்ள மறுத்த இஸ்லாமியர்-அல்லாத ஓராங் அஸ்லி சிறார்களை ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படும் சம்பவம் தொடர்பில்தான் அவர் இவ்வாறு கூறினார்.
அச்சம்பவம் நடந்து பல நாள்கள் ஆன பின்னரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவீல்லை என இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் கோபிந்த் கூறியிருந்தார்.
“எல்லா மலேசியர்களுக்குமான பிரதமர் என்பதைக் காண்பிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.
“இவ்விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன் என்பதையும் பிரதமர் விளக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.
‘சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும்’
நேற்று மலேசிய கிறிஸ்துவ கூட்டமைப்பின் கிறிஸ்மஸ் தேநீர் விருந்தில் நஜிப் ஆற்றிய உரைமீது கருத்துரைத்த கோபிந்த் இவ்வாறு கூறினார்.
அதில் நஜிப், தாம் ஒரு பகுதியினருக்கு மட்டுமின்றி எல்லா மலேசியர்களுக்குமான பிரதமர் என்று கூறினார். அதைத் “திரும்பத் திரும்பவும்” வலியுறுத்தினார்.
நஜிப் அதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதே அவரது பேச்சு வெறும் பேச்சு என்பதைக் காண்பிக்கிறது என கோபிந்த் குறிப்பிட்டார்.
அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நவம்பர் மாதம் கல்வி அமைச்சு உறுதி கூறியிருந்தது. ஆனால், இதுவரை எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
அச்சம்பவத்தில் அறையப்பட்ட மாணவர்களின் பெற்றோர், அதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்யச் சென்றபோது அதை கமுக்கமாக வைத்துக்கொள்ள போலீசார் கையூட்டு கொடுக்க முன்வந்தார்கள் என்று கூறிக்கொண்டனர்.