பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை : பல்கலைக்கழக மாணவர்கள்

jafna_university_studentsஇலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு ஒன்று, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் வெலிக்கந்த முகாமுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றது. இந்தக் குழுவினருடன் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் சென்றிருந்தனர். இவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடியிருக்கின்றார்கள்.

மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, பல்கலைக்கழக நிர்வாகத்தினருடனான சந்திப்பின்போது அண்மையில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக தாங்கள் அந்த மாணவர்களிடம் கேட்டதாகவும், ஆனால் அந்த மாணவர்கள் தாங்கள் அவ்வாறு எவரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருப்பதாகவும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் பசுபதி சிவநாதன் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், தடுப்பில் இருந்தவாறே கல்வியை அவர்கள் தொடர்வது பற்றியும் தாங்கள் பேசியதாகவும் பேராசிரியர் சிவநாதன் கூறினார்.

எனினும் மாணவர்கள் தமது படிப்பை அங்கு தொடர்ந்தாலும், தமது இறுதிப் பரீட்சைக்குரிய ஆய்வுக் கட்டுரையை தடுப்பு முகாமுக்குள் இருந்தவாறே தயார் செய்ய முடியாது என கூறியிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரையில் தாங்கள் விரிவுரைகளுக்குச் செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ள ஏனைய மாணவர்கள் இதனைத் தாங்கள் ஒரு போராட்டமாக செய்யவில்லை என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு தங்களுக்கு இதைத்தவிர வேறு மார்க்கம் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அரச தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தடுப்பில் இருந்து கொண்டு தாங்கள் எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள மாணவர்கள், நிர்வாகம் மற்றும், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மூதவை ஒன்றிணைந்து மாணவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என தடுப்பில் உள்ள மாணவர்கள் தங்களிடம் கூறியிருப்பதாகவும் பேராசிரியர் சிவநாதன் தெரிவித்துள்ளார்.

-BBC

TAGS: