சாட்சிகள் இல்லை, அதனால் தவறு செய்த போலீஸ்காரர் மீது வழக்குப் போட முடியாது

ஜுலை 9ம் தேதி பெர்சே 2.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிகமான முரட்டுத்தனத்தைக் காட்டியதாக கூறப்படும் போலீஸ் அதிகாரியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

தவறு செய்த அந்த அதிகாரி மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

பேரணியின் போது அந்த அதிகாரி தனது முகத்தைக் கைக்குட்டையால் மூடியிருந்தார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் தொடரப்பட மாட்டாது.

“அந்த விவகாரம் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் இல்லாததால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 352வது பிரிவின் கீழ் போலீசார் புலனாய்வை மேற்கொண்டதாக கூ தெரிவித்தார்.

“கடுமையாக தூண்டப்பட்டால் தவிர தாக்குதல் அல்லது கிரிமினல் பலத்தைப் பயன்படுத்துவது” குற்றம் என அந்தப் பிரிவு சொல்கிறது.

அந்த பிரிவின் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் ஒருவருக்கு ஒராண்டு சிறைத் தண்டனை அல்லது ஈராயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

என்றாலும் தவறு செய்த அந்த அதிகாரி மீது கூட்டத்தைக் கலைக்கும் போது சீரான செயல் நடைமுறைகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பெர்சே 2.0 பேரணியைத் தொடர்ந்து போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுவதை காட்டும் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் குறிப்பாக பேஸ் புக் என்னும் சமூக ஊடகத்தில் சேர்க்கப்பட்டன.

துங் ஷின் மருத்துவமனை வளாகத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் போது சீரான செயல் நடைமுறைகளை மீறிய  போலீஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு திங்கட்கிழமை அறிவித்தது.

துங் ஷின் மருத்துவமனை வளாகத்தின் மீதும் அருகில் இருந்த சீன மகப் பேறு மருத்துவமனை வளாகம் மீதும் புகைக் குண்டுகள் வீசப்பட்டதையும் நீர் பாய்ச்சப்பட்டதையும் சுகாதார அமைச்சு அதற்கு முன்னர் உறுதி செய்தது.