தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்கு வரவேண்டுமென்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு வருமாறு தனது வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாகவும், ஆனால் அதற்கு முன்னதாகவே தான் வெளிநாடு சென்றுவிட்டதால், நாடு திரும்பிய பின்னரே விசாரணைக்கு சமுகமளிக்கமுடியும் என்று தனது கட்சியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் ஊடாக புலனாய்வுத் துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
தன்னை விசாரணைக்கு அழைத்துள்ள காரணம் பற்றி அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த சம்பவங்களின் பின்னர் அங்கு பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ள பின்னணியில், வடக்கில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடப்பதாக தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரினதும் இன்னும் சில தமிழ், சிங்கள மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளினதும் புகைப்படங்கள் அந்த துண்டுபிரசுரங்களில் வெளியாகியுள்ளன.
‘சுயாதீன தேசப்பற்றுடைய புத்திஜீவிகளின் சங்கம்’ என்ற பெயரில் சிங்கள மொழியில் வெளியாகியுள்ள இந்த துண்டுபிரசுரங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜேவிபியிலிருந்து பிரிந்து உருவான முன்னிலை சோசலிஸக் கட்சி மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் ஆகிய தரப்பினர் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தத் துண்டுபிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.