வாக்காளர்களை இன அடிப்படையில் பிரித்து வகைப்படுத்த வேண்டாம் என இசி என்ற தேர்தல் ஆணையத்தை பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும் என முன்னாள் இசி தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ள யோசனையைத் தொடர்ந்து அது அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வாக்காளர்களை இன அடிப்படையில் கணக்கிடுவது கடந்த ஐந்து தசாப்தங்களாக “மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்கு நன்மையைக் காட்டிலும் தீமையையே அதிகம் செய்துள்ளது” என பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அதனால் மலேசியர்களும் அரசாங்கமும் குறிப்பாக அரசியல்வாதிகள் நாட்டின் பிரச்னைகளை இன அடிப்படையிலேயே கண்ணோட்டமிடுகின்றனர்,” என துவான் இப்ராஹிம் சொன்னார்.
“பிஎன் -னில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அனைத்தும் இன அடிப்படையைக் கொண்டுள்ளன. அவை தங்களது இன வாக்குகளை நிலை நிறுத்திக் கொள்வதற்கு வசதியாக அவ்வாறு செய்யப்படுகிறது,” என அவர் எண்ணுகிறார்.
என்றாலும் இசி அந்த முறையை வாக்காளர் வயது, ஆண்/பெண் அடிப்படைக்கு மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது என துவான் இப்ராஹிம் கருதுகிறார்.
அத்தகைய புள்ளிவிவரங்களைக் கொண்டு வயது அடிப்படையில் சமூகத்தின் தேவைகளை அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் விவாதிக்க முடியும். அதன் வழி இயல்பாகவே அனைத்து இனங்களுடைய பிரச்னைகளும் சமாளிக்கப்படும்.”
“அதனால் சில அரசியல் கட்சிகள் வாக்குகளைக் கவருவதற்கு சமய, இன உணர்வுகளை பயன்படுத்தும் வாய்ப்புக்களும் மலிவான அரசியல் தந்திரமாக இனங்களுக்கு இடையில் பகை உணர்வை தோற்றுவிக்கும் வாய்ப்புக்களும் குறையும்,” என அவர் சொன்னார்.
ஒவ்வொரு வாக்காளருடைய அடையாளக் கார்டிலும் தகவல்கள் இருப்பதால் புதிய முறையை அமலாக்குவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றும் துவான் இப்ராஹிம் எண்ணுகிறார்.