பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காப்பு அமைச்சராக இருந்த போது 100 மில்லியன் ரிங்கிட் தேசிய தற்காப்பு ஆய்வு மய்யத் திட்டத்தை தகுதி இல்லாத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதின் மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது.
சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா ராஜா அப்துல்லாவுக்குச் சொந்தமான Awan Megah Sdn Bhd என்ற அந்த நிறுவனம் 1993ம் ஆண்டு தொடக்கம் செயல்படாமல் இருப்பது நிறுவன ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி இன்று கூறினார்.
“1994ம் ஆண்டிலிருந்து இது வரை அந்த நிறுவனம் எந்தப் பரிவர்த்தனையையும் செய்யவில்லை என்பதே அதன் அர்த்தமாகும். அது தொடர்ந்து செயல்படாத நிறுவனமாகவே இருந்து வந்துள்ளது,” என இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
“2005ம் ஆண்டு அந்த Awan Megah, அந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் தகுதி இல்லாத கட்டுமான நிறுவனம் என்பது தெளிவாகத் தெரியும் போது, பல மில்லியன் ரிங்கிட் பெறும் தனியார் மயத் திட்டத்தை அதற்குக் கொடுத்ததின் மூலம் அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப் தாம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் பொருள்படும்.”