இலங்கையின் வடக்கே பள்ளிக்கூடங்களில் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியை கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வருட இறுதி விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காகப் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்திருக்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தில், வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு சிங்கள மொழியைக் கற்பிப்பதற்கான செயற்பாடு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இதற்கென இராணுவத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று தமக்குரிய பாட நேரங்கள் குறித்து அதிபர்களுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையை இலங்கை ஆசிரியர் சங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.
இராணுவத்தினரை பாடசாலைகளில் கற்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை என்ன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாடசாலைகளையும் இராணுவ மயமாக்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே தாங்கள் இதனை நோக்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
பாடசாலை மாணவர்களுக்கு சிங்கள மொழியைக் கற்பிக்க வேண்டிய தேவை இருந்தால் அதற்கான ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்வாங்கி, அவர்களுக்கு உரிய நியமனம் வழங்கி அதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறில்லாமல் இராணுவத்தினரைக் கொண்டு சிங்கள மொழியைப் பாடசாலைகளில் கற்பிக்க முற்படுவது முறையற்றது என்றும் இதனைத் தாங்கள் எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சேவையின் யாப்புக்கு முரணான இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அதிகாரிகளிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் மூலமாகக் கோரியிருக்கின்றது.
இந்த விடயம் குறித்து வடமாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளின் கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை.