யாழ் பல்கலைக் கழகம் மீண்டும் ஆரம்பிக்கப்படாவிட்டால்; அது மூடப்படும் : கல்வி அமைச்சர்

sb_dissanayakaயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று முதல் முழுமையாக செயற்படத் தொடங்கும் எனவும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு மாணவர்களும் தைப்பொங்கலுக்கு முன்னர் விடுவிக்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும் இலங்கை உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் இன்று திங்கட்கிழமை அப்பல்கலைக்கழகம் முழுமையாக செயற்பட ஆரம்பிக்காவிட்டால், அதை மூடுவது என்றும் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க கூறினார்.

அங்கு எவ்விதத் தடங்கலுமின்றி சித்தமருத்துவத்துறை, நுண்கலைத்துறை போன்ற துறைகள் கல்விப் பணிகளை முன்னெடுத்து வந்தன என்றும், கலைத்துறை, மேலான்மைத்துறை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்த காரணத்தலேயே கல்விச் செயற்பாடுகள் தடைபட்டன எனவும் அவர் கூறுகிறார்.

அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அமைச்சர் கூறுகிறார்.

விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து வாரா வாரம் ஆராயப்பட்டு வருவதாகக் கூறும் அவர், விசாரணைகளில் அவர்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தால் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இருந்த போதிலும் தைப் பொங்கலுக்கு முன்னர் அவர்கள் நால்வரும் விடுதலையாகக் கூடும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

திங்கட்கிழமை பல்கலைக்கழகம் திறக்கப்பட்ட பிறகும் அங்கு கல்விப் பணிகள் முழுமையாக நடைபெறாவிட்டால் பண விரயத்தை தடுக்கும் நோக்கில், அதை மூடுவது என்றும் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது எனவும் அமைச்சர் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

மாணவர்களும் திங்கட்கிழமை முதல் வகுப்புகளுக்கு வர உறுதிமொழி கொடுத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர், யாழ் கட்டளைத் தளபதி, போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டதாகவும் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க கூறினார்.

TAGS: