இலங்கையில் நீதித்துறை சுயாதீனம், அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் இல்லையெனின் இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கனடா பங்கேற்காது என அந்நாட்டு குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர்; அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அத்துடன் இங்கு மனித உரிமை மீறல்களும் மீறப்படுகின்றன. இது தொடர்பில் கனடா அக்கறை காட்டி வருகின்றது” என அமைச்சர் ஜேசன் கெனீ தெரிவித்தார்.
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர், தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை கொழும்பில் சந்தித்தார். இதன்போதே இக்கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் இலங்கையிடமிருந்து காத்திரமான முன்னேற்றத்தினை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவுக்கு வரும் குடியேற்றவாசிகளுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
சட்ட ரீதியான அகதிகள் உள்ளடங்களாக கனடாவிற்குள் சட்டபூர்வமாக வருவோருக்கு அனைத்து விடயத்திலும் உலகின் வேறேந்த நாட்டையும் விட அதிகமாக தனி மனித குடிவரவுகளை ஏற்றுக்கொள்ளும் கனடாவின் தாராள குடியேற்ற முறை தொடரும் எனவும் ஜேசன் கெனி மேலும் தெரிவித்தார்.