ஒரு மாத காலத்திற்கு மேலாக முடங்கியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர் வருகை மிகவும் குறைந்திருந்ததாகவே தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழகத்தின் சில வகுப்புகளுக்கான விரிவுரைகள் மட்டுமே நடைபெற்றதாகவும், இதனால் ஏனைய பாடநெறிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் பல்கலைக்கழகச் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்படுவது பற்றிய அறிவித்தல் திங்கள் கிழமை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் விரிவுரைகளுக்கு வருகை தருவது தாமதமாகியிருப்பதாகப் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இங்கு கல்வி பயிலும் மாணவர்களில் கணிசமான தொகையினர், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இதனால் அவர்கள் விரிவுரைகளுக்கு வந்து சேர்வதற்கு ஓரிரு நாட்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ் பல்கலைக்கழகத்தில் நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள பரீட்சைகள் வரும் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, பரீட்சைகளுக்கான நேர அட்டவணைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக நேற்று விரிவுரைகளுக்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.