சர்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை பணிப் பெண்னுக்கு சவுதி அரேபியா நிறைவேற்றிய மரண தண்டனை

rizana_nafeekஇலங்கை பணிப்பெண்னான ரிசானா நஃபீக் 2005 ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அவருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

4 மாத குழந்தையை கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா நஃபீக் மறுத்திருந்தார்.

ரிசானா அந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் தருணத்தில் அவருக்கு 17 வயதுதான் என்றுபரவலாக நம்பப்படும் நிலையில், அந்தக் கொலை நடந்தபோது அவர் சட்டப்படி ஒரு சிறுமி மாத்திரமே.

இந்த நிலையில், ரிசானாவை சிரச்சேதம் செய்ததற்காக, சவுதி அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட முடியும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

8 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவத்தில் அந்த 4 மாதக் குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார். ஆரம்பகட்டத்தில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம்கூட அழுத்தங்களின் கீழ், மொழி பெயர்ப்பு உதவியும் இல்லாமல் பெறப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவருக்கான தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு சட்டத்தரணிகளின் உதவியும் வழங்கப்படவில்லை.

ஆனால், தற்போது 8 வருடங்களின் பின்னர் தனது விதி என்ன என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ரிசானாவுக்கு 17 வயது மத்திரமே என்றும், அவர் சட்டப்படி சிறுமி என்றும் அவரது ஆதரவாளர்களும், உறவினர்களும் கூறுகிறார்கள்.

rizana_homeஇலங்கையின் கிழக்கே மூதூரில் உள்ள அவரது வீட்டுக்கு 2010 ஆம் ஆண்டில் பிபிசி நிருபர்கள் சென்ற போது, அவர் அந்தச் சம்பவம் நடந்தபோது சிறுமிதான் என்பதை நிரூபிக்கும் பள்ளிக்கூடப் பதிவு ஒன்றையும் நிருபர்களால் பார்க்க முடிந்தது.

அந்த பதிவுகளும், பிறப்புச் சான்றிதழும் உண்மையானால், அந்த கொலை நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் அவருக்கு 17 வயது மாத்திரமே.

ஆகவே அவரை மரண தண்டனைக்கு உள்ளாக்கியதன் மூலம், சிறார்களின் சர்வதேச உரிமைகளை சவுதி அரசாங்கம் மீறியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழும்.

அவரது வயதை வேலைவாய்ப்பு முகவர் பொய்யாக மாற்றிக் கூறி அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இலங்கை ஜனாதிபதியாலும், ஏனைய அதிகாரிகளாலும் மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்களாலும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுவந்தது.

ஆனால், மேற்கத்தைய அரசாங்கங்களின் அனுசரணையுடனான சவுதி அரசாங்கத்தின் முடிவில், இந்தக் கோரிக்கைகள் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் சவுதி மன்னர்தான் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.

முன்னதாக, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்தால் ரிசானா மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர்கள் மன்னிப்பளிக்க மறுத்து விட்டதாக ரிசானாவின் சார்பில் செயற்பட்டவர்கள் முன்னர் பிபிசிக்கு கூறியிருந்தனர்.

சவுதி அரேபியா என்றும் அமெரிக்கர்களையோ அல்லது ஐரோப்பியர்களையோ கொல்வதில்லை என்றும் அது ஆசியர்களையும், ஆப்பிரிக்கர்களையுந்தான் கொலை செய்வதாகவும் கூறியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க, சவுதி அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று கூறியுள்ளார்.

சவுதி அரசினால் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை, இலங்கையில் உள்ளூரில் மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற ஆரம்பிக்கக் கூடாது என்ற சிவில் சமூக கோரிக்கையை வலுப்படுத்தச் செய்யும்.

அத்துடன் மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்தும், ரிசானா போன்று பல இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு பணியாளர்களாகத் துரத்தும் இலங்கையில் உள்ள வறுமை குறித்தும் வாதப் பிரதி வாதங்களை இது மீண்டும் அதிகரிக்கச் செய்யும்.

-BBC

TAGS: