‘அல்லாஹ்’ சர்ச்சை மீது எழுந்துள்ள உட்பூசலைத் தீர்க்க பாஸ் முயலுகிறது

pas“மலாய் பைபிள்களில் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீது பாஸ் தலைவர்களிடையே எழுந்துள்ள முரண்பாடான எண்ணங்களைச் சரி செய்வதற்கு அந்த வார்த்தையை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்த அனுமதிக்கலாம் என 2010ம் ஆண்டு கட்சி செய்த முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.”

அந்தக் கருத்தை பாஸ் கட்சியின் உலாமா துணைத் தலைவர் மாபோட்ஸ் முகமட் தெரிவித்ததாக தி ஸ்டார் ஆங்கில மொழி நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் தலைவராக இருக்கும் 15 உறுப்பினர்களைக் கொண்ட  Syura மன்றத்தில் ஜோகூர் பாஸ் தலைவரும் ஒருவர் ஆவார்.

“அல்லாஹ்’ என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்தாத வரையில் முஸ்லிம் அல்லாதார் அந்த சொல்லைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் தடை விதிக்கவில்லை என 2010ம் ஆண்டு பாஸ் கட்சி ஒப்புக் கொண்டது.

“ஆனால் அந்தக் கருத்தை சில தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் Syura மன்றம் கூடி ஒர் இணக்கத்தைக் காண வேண்டும்,” என மாஹ்போட்ஸ் சொன்னதாக அந்த ஏடு தெரிவித்தது.pas1

பாஸ் தலைவர்கள் கடந்த சில வாரங்களாக முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுவதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பூசலை அம்னோ ஆதரவு ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி வருகின்றன.

தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் முகமட் சாபு, இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான், மாஹ்போட்ஸ் ஆகியோர்  முந்திய முடிவை ஆதரிக்கின்றனர். அல்லாஹ்’ என்ற சொல்லைத் தவறாகப் பயன்படுத்தாத வரையில் முஸ்லிம் அல்லாதார் அந்த சொல்லைப் பயன்படுத்தலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

அந்த நிலையை பக்காத்தானும் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் பைபிள் மலாய் பதிப்பில் ‘அல்லாஹ்’ பயன்படுத்தப்படுவதை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, ஆன்மீகத் துணைத் தலைவர் ஹாரோன் டின், உலாமா தலைவர் ஹருண் தாயிப், தகவல் பிரிவுத் தலைவர்  துவான் இப்ராஹிம் துவான் மான் ஆகியோர் எதிர்க்கின்றனர்.

 

TAGS: