சில கும்பல்கள் பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமிக்குக் குழிபறிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறது.
செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு வந்த குறுஞ்செய்தி நிபோங் திபால், பிறை, பாகான் டாலாம் ஆகியவற்றைச் சேர்ந்த டிஏபி உறுப்பினர்கள் உள்பட சுமார் 150 பேர் கட்சித் தேர்தலில் வாக்குகள் தப்பாகக் கணக்கெடுக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகத் தெரிவித்தது.
“கணினி கோளாறு காரணமாக தேர்தல் முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறு-தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்”, என்றந்த குறுஞ்செய்தி கூறிற்று.
கட்சியின் அண்மைய தேர்தலின்போது முடிவுகளில் தில்லுமுல்லு நிகழ்ந்திருப்பதாக இரு டிஏபி உறுப்பினர்கள் லாடாங் பாரோயில் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) யிடம் புகார் செய்திருப்பதை அடுத்து அக் குறுஞ்செய்தி வெளியானது.
இது பற்றி இராமசாமியைத் தொடர்புகொண்டு பேசியபோது, அந்த ஆர்ப்பாட்டத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றார். அது பிஎன் கையாள்களின் வேலையாக இருக்கலாம் என்றாரவர்.
“அவர்கள் பிஎன் ஆதரவாளார்கள். டிஏபி உறுப்பினர்கள்போல் வேடமிட்டு பொதுமக்களிடம் தப்பான கருத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள். நிபோங் திபால் உறுப்பினர்கள் எதற்காக பிறையில் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்? அங்கேயே செய்யலாமே”,என்றவர் கூறினார்.
இராமசாமி, பத்து கவான் எம்பியும் பிறை சட்டமன்ற உறுப்பினருமாவார்.
அவரை அவரது கட்சிக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புப்படுத்துவது அவருக்குக் குழிபறிக்கும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
‘டிஏபி உறுப்பினர்களுக்காக ஐபிஎப் செய்த வேலை’
கடைசியில் பார்க்கப்போனால், நேற்று நண்பகல் டிஏபி மறு-தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்தது பிஎன் ஆதரவுக் கட்சியான இந்தியர் முற்போக்கு முன்னணி (ஐபிஎப்) என்பது தெரிய வந்துள்ளது.. அதன் தலைவர் எம்.வி. மதியழகன் சுமார் 20 பேருடன் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்.
கட்சியில் தங்கள் கருத்தைச் சொல்ல இடமளிக்கப்படுவதில்லை என்பதால் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தும்படி டிஏபி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாகவும் அதனால் அதை நடத்தியதாகவும் மதியழகன் கூறிக்கொண்டார்.
மறு-தேர்தல் நடத்த மறுக்கும் டிஎபி ஆலோசகர் லிம் கிட் சியாங்கையும் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கையும் அவர் சாடினார்.
“டிஏபி-இல் ஜனநாயகம் இல்லை. கட்சியின் தலைமைத்துவத்தை எதிர்ப்போர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறார்கள். சங்கப் பதிவதிகாரி இதை விசாரிக்க வேண்டும்”, என்று மதியழகன் குறிப்பிட்டார்.
இதனிடையே, பத்து கவான் டிஏபி உதவித் தலைவர் எம்.இராமச்சந்திரன் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி டிஏபி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாக மதியழகன் சொல்வது “பொய்”என்றார்.
“டிஏபி விவகாரம் பற்றிக் கேள்வி எழுப்ப அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. ஐபிஎப்-பே பல அணிகளாக பிரிந்து கிடக்கிறது. மற்றவர்களைக் கேள்வி கேட்குமுன்னர் முதலில் சொந்த வீட்டை அவர் ஒழுங்குப்படுத்தட்டும்”, என்றவர் சொன்னார்.