முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், தாம் பிரதமராக இருந்த காலத்தில் பிலிப்பீனோ குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டது உண்மை எனக் கூறியிருக்கிறார். ஆனால் எல்லாம் சட்டப்பூர்வமானவை என அவர் வலியுறுத்தினார்.
“அந்நியர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அவர்கள் குடிமக்களாவதை மலேசியா ஏற்றுக் கொள்கிறது.”
“அவர்களில் பலர் சபாவில் ஒரிரு நாட்கள் மட்டும் இருக்கவில்லை. மாறாக 20 அல்லது 30 ஆண்டுகளாக அங்கு இருக்கின்றனர். மலாய் மொழியும் பேசுகின்றனர். குடிமக்களாவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.
வாக்குகளுக்காக குடியுரிமை திட்டம்
1990ம் ஆண்டுகளில் தாம் பிரதமராக இருந்த காலத்தில் சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை கொடுக்கப்பட்ட திட்டம் மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி மகாதீர் கருத்துரைத்தார்.
அந்த விவகாரம் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளித்தவர்கள், அந்த நடவடிக்கைக்கு மகாதீருடைய அணுக்கமான கூட்டளிகளான அவரது அரசியல் செயலாளர் அப்துல் அஜிஸ் சம்சுதின், அப்போதைய உள்துறை துணை அமைச்சர் மெகாட் ஜுனிட் மெகாட் அயூப் ஆகியோர் காரணம் எனப் பழி சுமத்தினர்.
என்றாலும் பிஎன் -னுக்கு நட்புறவான மாநில அரசாங்கத்தை பெறுவதற்காக குடியுரிமை கொடுக்கப்பட்டது எனச் சொல்லப்படுவதை மகாதீர் மறுத்தார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது வாக்காளர்களின் சொந்தத் தேர்வு என்றும் அவர்களில் சிலர் எதிர்க்கட்சிகளை ஆதரித்தனர் என்றும் அவர் சொன்னார்.
1994 மாநிலத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்னதாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை அவரிடம் சுட்டிக்காட்டிய போது, மகாதீர் சொன்னார்: “அது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது சட்டத்துக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது.”
“தேர்தலுக்கு முன்பு நிகழ்ந்தது என்பதால் அது சட்டத்துக்கு புறம்பானது என அர்த்தமல்ல.”
முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தீவகற்ப மலேசியாவில் தகுதி பெறாத ஒரு மில்லியன் மக்களுக்கு குடியுரிமை கொடுத்ததின் மூலம் அதனை விட மோசமாக செய்துள்ளதாகக் கூறிக் கொண்ட மகாதீர் ஆனால் யாரும் அதனைப் பிரச்னையாக்கவில்லை என வருத்தமுடன் கூறினார்.
ஆர்சிஐ முன்பு சாட்சியமளிக்குமாறு தமக்கு இன்னும் அழைப்பாணை அனுப்பப்படவில்லை எனக் குறிப்பிட்ட மகாதீர் அவ்வாறு அழைக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தயார் என்றார்.