மெர்தேக்காவுக்கு முந்திய குடியுரிமை மீது ஆர்சிஐ-யை அமைக்க வேண்டும் என மகாதீர் யோசனை

mahaமலேசியா சுதந்திரம் பெற்றதற்கு முன்னர் மலாயாக் கூட்டரசில் இருந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டதை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யோசனை கூறியிருக்கிறார்.

என்றாலும் அது வெறும் யோசனையே என்று அவர் தெரிவித்தார், ஏனெனில் எத்தகைய விசாரணையும் (குடியுரிமை வழங்கப்பட்டது மீது) முழுமையானதாக இருக்க வேண்டும், ஒரு பக்கத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தக் கூடாது என்றார் அவர்.

“நான் வெறும் யோசனையை மட்டுமே சொல்கிறேன். அதனை அமலாக்குவதில் உண்மையில் தீவிரமாக இல்லை. ஆனால் விசாரணை நடத்தப்பட்டால் அது முழுமையானதாக இருக்க வேண்டும். ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நியாயமானதாக இருக்காது,” என்றார் மகாதீர்.

அவர் இன்று புக்கிட் மெர்டாஜாம் மாரா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் “2013ம் ஆண்டுக்கான பினாங்கு மலாய்க்காரர்கள் பொருளாதார, கல்வி உருமாற்றம்” என்னும் தலைப்பைக் கொண்ட மாநாட்டில் கொள்கையுரை நிகழ்த்திய பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் சபாவில் 200,000 அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கியதாக அவர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குறைகள் பற்றிக் கருத்துரைக்குமாறு அவரிடம் முன்னதாகக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த 200,000 அந்நியக் குடியேற்றக்காரர்கள் சபாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் வசித்துள்ளனர். மலாய் மொழிபேசியதுடன் உள்ளூர் பண்பாட்டுடன் இணைந்துவிட்டனர் எனக் குறிப்பிட்ட மகாதீர்,” சட்ட அடிப்படையிலும் அவர்கள் குடியுரிமைக்குத் தகுதி பெற்றுள்ளதாகச் சொன்னார்.

சட்டத்தில் இடமில்லை

அந்த நேரத்தில் சட்டத்தில் இடமில்லை என்ற போதிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் மலேசியாவுக்கு வந்த ஒரு மில்லியன் அந்நியக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமைகளை முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் வழங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.maha1

“மலாய்க்காரர்கள் தாராளப்போக்குடன் நடந்து கொண்டதாலும் தங்கள் அதிகாரத்தைக் குறைத்துக் கொள்ள அவர்கள் தயாராக இருந்ததாலும் அந்த நிலைமை உருவானது. அது சபா நிலையிலிருந்து பெரிதும் மாறுபட்டதாகும். காரணம் அங்கு குடியுரிமை பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தது,” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக அந்த நிகழ்வில் உரையாற்றிய அந்த முன்னாள் பிரதமர்,மலாய்க்காரர்கள்முடிவு செய்வதற்கு முன்னர்  எல்லா விஷயங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி நாடு சீர்குலைய அனுமதித்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

“தங்கள் தலைவர்கள் மீது சிலர் மிக அளவுக்கு அதிகமாக பற்றுதல் வைத்திருப்பதால் அவர்கள் (அந்தத் தலைவர்கள்) தவறு செய்தாலும் அவர்களை ஆதரிக்கின்றனர். ஆகவே நாம் அத்தகைய உணர்வுகளுக்கு அடிமையாகி விட நம்மை அனுமதிக்கக் கூடாது.”

அந்த மாநாட்டில் மகாதீர்துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமட் அலி, பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, பினாங்கு பெர்க்காசா தலைவர் யூசோப் சுஹாய்மி முகமட் யாத்திமா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

பெர்னாமா