‘வாக்காளர் பற்றிய விவரங்கள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன?’

1pmசிலாங்கூர் வாக்காளர்களுக்குப் பிரதமரும் சிலாங்கூர் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அனுப்பி வைத்த புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் தொடர்பில் மாற்றரசுக்கட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இன்று காலை தம் சேவை மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிலாங்கூர் டிஏபி செயலாளர் இயான் யோங் ஹியான் வா, தாமும் தம் மனைவியும் உள்பட சிலாங்கூரில் உள்ள பல வாக்காளர்கள் புத்தாண்டு வாழ்த்துக் கடிதத்தையும் புதிய நாள் காட்டியையும் பெற்றதாகக் கூறினார்.

வாழ்த்துக் கடிதத்தில் நஜிப், புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருப்பதுடன் அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும்  வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“2013 மலேசியர் அனைவருக்கும், குறிப்பாக சிலாங்கூர் மக்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. நான்காண்டுகளுக்கு மேலாக டிஏபி,பிகேஆர், பாஸ் அரசாங்கத்தின் சீர்கேடான அரசின்கீழ் இருந்த பின்னர் இப்போது அதில் மாற்றம் காண்பதற்கான நேரம் வந்திருக்கிறது.

அடுத்த தேர்தலில் பிஎன்னுக்கு புதிதாக ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். முன்பு இருந்த பிஎன் அரசில் சில தவறுகள், சில குறைபாடுகள் நிகழ்ந்திருப்பதை உணர்கிறோம். இப்போது புத்துணர்வுடன் மீண்டும் எழுச்சி பெற்று சிலாங்கூர் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க உறுதி கூறுகிறோம்”, என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது.

1pm1சிலாங்கூர் வாக்காளர்கள் அனைவருக்கும் என்றில்லாவிட்டாலும்  பலருக்கு அக்கடிதம் வந்திருக்கலாம் வந்திருக்கலாம் என்று இயான் யோங் (வலம்) நம்புகிறார்.

அவரது சேவை மைய இயக்குனர் தொங் கிம் பாட், ஸ்ரீகெம்பாங்கான் பாரு கிராம உதவித் தலைவர் லியு மூக் கியோ ஆகியோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும்கூட இக்கடிதம் வந்துள்ளது.

இயான் யோங்குக்கு ஒன்று புரியவில்லை. அக்கடிதத்தில் வாக்களிக்கும் இடத்தின் முகவரியும் மைகார்ட் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

“வாக்காளர் பற்றிய தகவல் பிஎன்னுக்கு எப்படி கிடைத்தது? தேர்தல் ஆணைய அகப்பக்கத்திலிருந்தும் வாக்காளர் பட்டியலிலிருந்தும் வாக்காளர்களின் தொகுதி பற்றித் தெரிந்துகொள்ளலாம். ஆனால், மைகார்ட் முகவரி கிடைக்காதே”, என்றாரவர்.

அவற்றை இசியிடமிருந்தும் தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி) யிடமிருந்தும் பிஎன் அரசு பெற்றதா என்றவர் வினவினார்.

புத்தாண்டு வாழ்த்துக்கடிதம் அனுப்ப செலவு செய்தது கட்சியா அல்லது அரசா என்பதையும் பிஎன் விளக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

“தேர்தலுக்குமுன்பே பிஎன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டது.

“இது ஒரு தொடக்கம்தான். போகப் போக பல அசிங்கமான வேலைகள் எல்லாம் நடக்கும்”.

இப்படிப்பட்ட பரப்புரை தப்பு என்று குறிப்பிட்ட இயான் யோங்,  அது பற்றி அதிகாரிகளிடம் புகார் செய்யப்போவதாகக் கூறினார்.

TAGS: