‘தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காது’

1um1எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுதல் என்பது “நடவாத காரியம்” என்று கூறும் ஓர் ஆய்வு அதன் விளைவாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகலாம் என்றும் கூறுகிறது..

யுனிவர்சிடி மலாயா ஜனநாயக மற்றும் தேர்தல் மையம் (Umcedel) முந்தைய தேர்தல் முடிவுகளையும் நடப்பு நிலவரங்களையும் அடிப்படையாக வைத்து  இம்முடிவுக்கு வந்துள்ளது.

“எங்கள் ஆய்வுக்கு அகப்படாத அசாதாரண கூறுகள்- ஆவி வாக்காளர்கள் போன்றவை- இருந்தாலொழிய” பிஎன் இப்போதைய நிலையிலேயே தொடரும் என்று அம்மையத்தின் இயக்குனர் முகம்மட் ரிட்சுவான் ஒத்மான் மலாய் நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

“கடந்த பொதுத் தேர்தலில்  தீவகற்ப மலேசியாவில் பிஎன் 47 விழுக்காட்டு வாக்குகளைத்தான் பெற்றது, பக்காத்தான் 49 விழுக்காட்டைப் பெற்றது. நாடு முழுக்க பிஎன்னுக்கு இருந்த ஆதரவு 50.2 விழுக்காடுதான்”, என்றவர் சொன்னார்.

“மூன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, (2008) பொதுத் தேர்தலுக்குச் சென்றபோது அவருக்கிருந்த மக்கள்செல்வாக்கு 70 விழுக்காட்டுக்குமேல். ஆனால், நஜிப்பின் மக்கள்செல்வாக்கு 58 விழுக்காடுதான். எனவே, நஜிப்பால் அப்துல்லாவைக் காட்டிலும் சிறப்பாக செய்துவிட முடியாது”, என்று முகம்மட் ரிட்சுவான் கூறினார்.

பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றுத்தர முடியாத பிரதமர் பதவி விலகுவது என்ற வழக்கம் அம்னோவில் உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் பதவி விலகினார். அப்துல்லாவுக்கு அந்நிலைதான் ஏற்பட்டது. நஜிப் விசயத்திலும் அதுதான் நடக்கும்….”, என்றாரவர்.

சுயேச்சை ஆய்வு மையமான மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வும் அதே முடிவைத்தான் காட்டுகிறது என்று அதன் செயல்முறை இயக்குனர் இப்ராகிம் சுப்பியானும் எடுத்துரைத்தார். வரும் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதென்பது அசாத்தியம் என்றாரவர்.

TAGS: