உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கான மறு பயிற்சிக்கு 22 மில்லியன் ரிங்கிட் ஏன் என்பதை முஹைடின் விளக்க வேண்டும்

muhaiஒப்பந்தம் ஒன்றுக்கு ஈடாகக் கல்வி அமைச்சர் முஹைடின் யாசினுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியதை அமெரிக்க விளையாட்டுக் கல்லூரி (USSA) மறுத்துள்ள போதிலும் டிஏபி அந்தப் பேரம் மீது தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றது.

ஆயிரம் உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர்களுக்கு மறு பயிற்சி அளிப்பதற்கு அம்னோவுடன் தொடர்புடையது எனக் கூறப்படும் நிறுவனம் ஒன்றுடன் நேரடிப் பேச்சுக்கள் மூலம் 22.9 மில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதை முஹைடின் நியாயப்படுத்த வேண்டும் என டிஏபி தேசிய பிரச்சாரச் செயலாளர் டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த USSA அமைப்பின் ‘அனைத்துலக உடற்பயிற்சிக் கல்வி, விளையாட்டு நிபுணத்துவ டிப்ளோமா’வின் கீழ் உள்நாட்டில் மறுபயிற்சி வழங்கப்படுகின்றது.

முஹைடின் வேண்டுகோளுக்கு இணங்க புதிதாக அந்த கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டதை USSA ஒப்புக் கொண்டுள்ளதை புவா ஒர் அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

muhai1அந்த USSA ” பிரபலம் இல்லாத அமெரிக்கக் கல்லூரியாகும். அது தொலைதூரக் கல்வித் திட்டத்தில் 600 மாணவர்களை மட்டுமே கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு உடற்பயிற்சி ஆசிரியருக்கும் ஆறு மாதப் பயிற்சிக்கு ஏன் 22,900 ரிங்கிட் செலவு செய்ய வேண்டும் என வினவினார்.

“அந்தத் தொகை Universiti Teknologi Mara வழங்கும் 18 மாத கால விளையாட்டுக் கல்வி டிப்ளோமாவுக்கு விதிக்கப்படும் 5,709 ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகமாகும்,” என்றார் அவர்.

திறந்த டெண்டர் வழையாக அரசாங்கக் குத்தகைகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுத்துள்ள வேண்டுகோளை முஹைடின் புறக்கணித்துள்ளதாகவும் புவா சாடினார்.

“ஆகவே நஜிப் வாக்குறுதி அளித்துள்ளவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றலோ அல்லது எண்ணமோ பிஎன் -னுக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது,” என்றும் புவா சொன்னார்.

டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் கடந்த சனிக்கிழமை அந்தப் பிரச்னையை எழுப்பியிருந்தார்.