பிணைய கைதிகளை மீட்க பயங்கரவாதிகளுடன் சண்டை: அல்ஜீரியாவில் 81 பேர் பலி

algeria attackஅல்ஜியர்ஸ் : ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், எண்ணெய் நிறுவன ஊழியர்களை மீட்க, பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில், 81 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது. இதையடுத்து, மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில், சகாரா பாலைவனத்தில் உள்ள எண்ணெய் நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள், கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.

பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, ‘பிபி’ நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ஊழியர்களை பயங்கரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.

பிணைய கைதிகளை மீட்க, அல்ஜீரிய இராணுவம் கடந்த வாரம் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 32 பயங்கரவாதிகளும், பிணைய கைதிகள் 23 பேரும் கொல்லப்பட்டனர். எண்ணெய் நிறுவனத்துக்குள், இன்னும், ஐந்து பயங்கரவாதிகள் உள்ளதாக அல்ஜீரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன. அவர்களுடன் நடக்கும் தொடர் சண்டையில் மேலும், 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஒருவரும், பிரிட்டன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த தலா ஆறு பேரும் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர். அல்ஜீரிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எண்ணெய் நிறுவனத்தில் இருந்த அல்ஜீரிய நாட்டை சேர்ந்த, 685 பேரும், வெளிநாட்டு ஊழியர்கள் 107 பேரும் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.