டாக்டர் மகாதிருக்கு எதிராகக் கண்டனக் கூட்டம்

1brickஇன்று, 21 என்ஜிஓ-க்களைச் சேர்ந்த சுமார் 20 சமூக ஆர்வலர்கள், மெர்டேகாவுக்குமுன் ஒரு மில்லியன் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை கொடுக்கப்பட்டதை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று முன்மொழிந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர்.

மகாதிர் அவ்வாறு கூறியது சீனர்கள் மற்றும் இந்தியர்களின் உள்ளத்தைப் புண்படுத்தி விட்டதாகக் கூறிய அவர்கள் அதற்காக மகாதிர் ஏழு நாள்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

1brick1அக்கூட்டத்துக்குத் தலைமைதாங்கிய ஏ.ராஜரத்தினம், மகாதிர் அவரின் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து பேசுகிறார் என்று குறைபட்டுக்கொண்டார்.ராஜரத்தினம் மலேசிய இந்திய முற்போக்குச் சங்கத் (மிபாஸ்) தலைவருமாவார்.

இன்று நண்பகலில் பிரிக்பீல்ட்ஸ் நீரூற்றைச் சுற்றிலும் கூடிய அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் “மிகவும் வெட்கம்கெட்ட மனிதர்”, “மிகப் பெரிய பொய்யர்”, “தேச துரோகி” என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

மகாதிர் அவ்வாறு பேசியதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றும் ராஜரத்தினம் கேட்டுக்கொண்டார்.

கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏ.சிவநேசன், மகாதிர்மீது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டலாம் என்றார்.

“மலாய்க்காரர்-அல்லாதாருக்குக் கொடுக்கப்பட்ட குடியுரிமை குறித்து இப்படி கேள்வி எழுப்பக் கூடாது.அது மற்றவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும்”, என்றார்.

கூட்டத்தின் முடிவில், பிப்ரவரி 17-இல், மகாதிரைக் கண்டித்து இதைவிட பெரிய பேரணி நடத்தப்படும் என்று ராஜரத்தினம் கூறினார்.