இலங்கை இராணுவ அதிகாரி ஒருவருக்கு இராணுவ பயிற்சியளிக்க அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணிபுரிபவர் சுதானந்த ரனசிங்கே. இவருக்கு அமெரிக்காவில் இராணுவ பயிற்சியளிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராஜபக்சேவின் சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபய ராஜபக்சே, தவறான தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா, இலங்கை இராணுவ அதிகாரிக்கு அனுமதி மறுத்துள்ளதாகவும், அமெரிக்கா மறுக்கும்பட்சத்தில், இலங்கை அதிகாரிகள், சீனா, இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இராணுவ பயிற்சி பெறுவர் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கனேடிய அரசாங்கம் அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவரை அழைத்து தமிழர்கள் குறித்த தமது அக்கறையினை வெளிப்படுத்தியுள்ளது.
கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பேய்ர்ட் மற்றும் கனாடாவிற்கான இலங்கை தூதுவர் சித்திராங்கனி வாகிஸ்வரா ஆகியோருக்கு இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கனேடிய அரசாங்க செய்தி தெரிவித்துள்ளது.