தோக் குரு (Tok Guru) வின் 82வது பிறந்த நாள் விழாவில் கர்பால்

பினாங்கில் இன்று பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கைச் சந்தித்தார்.

பிற்பகல் மணி மூன்று வாக்கில் கர்பால் வீட்டுக்குச் சென்ற நிக் அஜிஸ் கிட்டத்தட்ட அங்கு 20 நிமிடங்களுக்கு மேல் இருந்தார்.

பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டங்கள் காரணமாக ஜாலான் ஸ்காட்லாந்தில் உள்ள கர்பாலின் பங்களாவில் நிறையப் பேர் இருந்தனர்.

நிக் அஜிஸ் அந்த வருகையின் போது தமது 82வது பிறந்த நாள் கேக்கை டிஏபி, பாஸ், பிகேஆர் தலைவர்கள் முன்னிலையில் வெட்டினார்.

“அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டதால் நான் அதிர்ச்சி அடைந்தேன்,” என கர்பால் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நான் அப்போது குளித்துக் கொண்டிருந்தேன். அவரைச் சந்திப்பதற்காக அவசரமாகக் கீழே வந்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்.  வேடிக்கையாகவும் பேசினார். அவரைப் பார்த்ததில் நான் உண்மையில் மகிழ்ச்சி அடைந்தேன்,” என அவர் வலியுறுத்தினார்.

“இது வரை என்ன நடந்திருந்த போதிலும் நமது ஒற்றுமை முன்னைப் போல வலுவாக இருக்கும் செய்தியை அவரது வருகை அனுப்பியுள்ளது.’

“நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். நமது வேறுபாடுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளோம்,” என்றும் கர்பால் குறிப்பிட்டார்.