பினாங்கில் தைப்பூசக் கொண்டாட்டங்களின் போது பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட விளம்பரப் பலகை வைக்கப்பட்டதை பினாங்கு இந்து அற வாரியம் தற்காத்துப் பேசியுள்ளது.
அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் பெரிய படமும் மற்ற தலைவர்களுடைய சிறிய படங்களும் இடம் பெற்றுள்ளன.
நேற்று தைப்பூச கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தைச் சுற்றிப் பார்த்த பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் அதனைக் குறை கூறினார்.
பக்காத்தான் விளம்பரப் பலகைகள் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதாக சொன்ன தெங்-கைக் கண்டித்த வாரியத் தலைவர் பி ராமசாமி, ‘பிஎன் இரட்டை வேடம் போடுவதாக’ சொன்னார்.
“பத்துமலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மிகப் பெரிய படத்தைக் கொண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்ட போது அவர்கள் ஏன் அதனைப் பிரச்னையாக்கவில்லை ? நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்,” என பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சருமான ராமசாமி சொன்னார்.
“பத்துமலைக் கோவில் வளாகத்தில் முருகப் பெருமானின் சிலையைக் காட்டிலும் பெரிதாக நஜிப் விளம்பரப் பலகை இருந்தது,” என அவர் குறிப்பிட்டார்.
“இங்கு நமது கோவில் வளாகங்களில் அரசியல்வாதிகள் யாரும் சித்தரிக்கப்படவில்லை.”
” கோவிலுக்கு அதிகாரம் இல்லை பிஎன் அது போன்று ஒரு போதும் செய்ததில்லை என்றும் அது சமயத் திருவிழாவின் போது தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும் என்றும் குறை கூறிய தெங்-கிற்கு ராமசாமி பதில் அளித்தார்.
காவடிகள் கொண்டு செல்லப்படும் பாதையில் முருகக் கடவுளுடன் லிம்-மின் படம் இருந்த பெரிய விளம்பரப் பலகையை கெராக்கான் தலைமைச் செயலாளரும் முன்னாள் மாநில ஆட்சி மன்ற உறுப்பினருமான தெங் சுட்டிக் காட்டினார்.
வழிபாட்டு இடத்திற்கு வெளியில் காட்சிக்கு வைக்கப்படும் எதன் மீதும் கோவில் குழுவுக்கோ அல்லது இந்து அற வாரியத்துகோ அதிகாரம் இல்லை என்றும் ராமசாமி சொன்னார்.
பொது இடத்தில் காட்சிக்கு வைக்கப்படுகின்றவை மீது பினாங்கு நகராட்சி மன்றத்துக்கே அதிகாரம் இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
“பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்தால் நாங்கள் அந்த விவகாரத்தை பரிசீலித்து மறு ஆய்வு செய்வோம்,” என அவர் நேற்று மாலை லிம் -முடனும் மற்ற பக்காத்தான் தலைவர்களுடனும் தைப்பூசக் கொண்டாட்ட இடங்களைச் சுற்றிப் பார்த்த போது கூறினார்.
“நாங்கள் கோவிலுக்குள் அரசியலைக் கொண்டு வருவதில்லை. பினாங்கு இந்து அற வாரியத்தில் என்னைப் போன்று சில அரசியல்வாதிகள் உள்ளனர். ஆனால் கோவில் குழுவில் யாரும் இல்லை,” என அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் அரசியல் விளையாடுவதாக தெங் குற்றம் சாட்டினால் பத்துமலையில் வைக்கப்பட்ட நஜிப் விளம்பரப் பலகையை என்ன சொல்வது ?”