ஹிண்ட்ராப் தடையை நீக்கம் செய்தது பெரிய விசயமல்ல, அதற்காக அது நஜிப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது என்பது விவேகமற்ற செயல் மட்டுமல்லாமல் அது ஹிண்ட்ராபின் அரசியல் விவாதங்களுக்கு ஆபத்தானது என்கிறார் வழக்கறிஞர் கா. ஆறுமுகம்.
ஹிண்ட்ராப் அமைப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்திக்கப்போவதாக கூறப்படுவது தொடர்பில் சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமாகிய வழக்கறிஞர் ஆறுமுகத்திடம் செம்பருத்தி இணையத்தளம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த கா. ஆறுமுகம்; “ஹிண்ட்ராப் உருவாக்கியுள்ள செயல்த் திட்டமானது இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல் அல்லல் படும் சமூகங்களுக்கும் உகந்ததாக உள்ளது. இந்தியர்களின் ஓட்டுகளுக்காக அலையும் நஜிப் அதை ஏற்றுக்கொள்வதை ஒரு விவேகமான செயலாக கருதுவார்” என்கிறார்.
மத்திய அரசாங்கத்தில் அரசியலில் மாற்றம் வராத வரையில் இந்தியர்களின் நிலை மாற வாய்ப்பில்லை. அம்னோவின் ஆதிக்கத்தை ஹிண்ட்ராப் தவறாக மதிப்பீடு செய்வது வரலாற்று தவறாக மாறிவிடும் என எச்சரித்த கா. ஆறுமுகம்; “மாற்றம் ஒன்றுதான் வழி என்ற வகையில் வெகுசன மக்கள் திரண்டு வரும் போது, கள்ள ஓட்டுகள் வழி அரசியல் நடத்த துணிந்துள்ள அம்னோவின் தேசிய முன்னணி பிரதமர் நஜிப்புடன் ஹிண்ட்ராப் பேச்சி வார்த்தை நடத்தி என்ன செய்யப்போகிறார்கள்?” என வினவுகிறார்.
எப்படியாவது ஆட்சியைப் பிடிப்போம் என்று கங்கணம் கட்டி வரிப்பணத்தைச் சீரழித்து, அந்நியர்களை வாக்காளர்களாக்கி, தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாக்கி, அரசு ஊடகங்களை கொண்டும், தனியார் நாளிதழ்களை மிரட்டியும் தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கும் அம்னோவின் தேசிய முன்னணியிடம் போராட்டவாதிகள் தங்களின் கொள்கைகளைப் பணயம் வைக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார்.
“பெர்சே, பச்சை பேரணி, கல்விக்கடனுக்கு எதிரான பேரணி, மாதச் சம்பள பேரணி போன்றவை கோரும் மாற்றங்களைக் கொண்டு வர நஜிப் தவறி விட்டார். அடிப்படை கொள்கை அற்ற நிலையில் சுயநலத்தன்மையுடன் செயல்படும் அம்னோவின் தேசிய முன்னணில், நஜிப் ஒரு பசு போல் தோன்றினாலும் அதனுள்ளே அம்னோ என்ற இனவாத புலி மறைந்துள்ளதை மறந்துவிட வேண்டாம்” என்கிறார் கா.ஆறுமுகம்.
“இந்தியர்களின் உரிமைகளுக்காக போரடுபவர்கள் முதலில் அம்னோவின் ஆட்சியை அகற்ற வேண்டும், அதன் பிறகுதான் ஒட்டுமொத்த இந்தியர்களும் உரிமைக்காக இணைவார்கள்” என அவர் மேலும் கூறினார்.