கிளிநொச்சி, இரணைமடுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஓடுபாதை, இலங்கை விமானப்படையினால் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இந்த புனரமைப்புப் பணிகள் 75 விழுக்காடு பூர்த்தியாகியுள்ள நிலையில் விரைவில் திறந்துவைக்கப்படவுள்ளதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளால் பயிற்சிக்காக தயார்படுத்தப்பட்ட சிறிய ஓடுபாதையே இந்த இரணைமடு ஓடுபாதை. சுமார் 1,500 மீற்றர் நீளம் வரை விரிவாக்கப்பட்டுள்ள இந்த ஓடுபாதை தற்போது இரணைமடு விமானப்படை ஓடுதளம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விமான ஓடுபாதையானது வர்த்தக, இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது. கனரக போக்குவரத்து விமானங்கள் தரையிறங்கும் வகையில் இந்த ஓடுபாதை விரிவாக்கப்பட்டு வருவதுடன் விரிவாக்கற்பணிகள் முடிவடைந்ததும் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.