தமக்குத் தெரியாமல் வாக்காளராகத் தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ள பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமியின் புதல்வியை ஓர் அரசியல் கட்சி வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) விளக்கியுள்ளது.
2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி செமினி சட்டமன்றத் தொகுதியிலும் உலு லங்காட் நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்காளராக ராமசாமியின் புதல்வி பதிவு செய்யப்பட்டுள்ளதாக இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் நேற்று கூச்சிங்கில் நிருபர்களிடம் தெரிவித்ததாக பெரித்தா ஹரியான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சிலாங்கூரில் உள்ள அவரது முகவரியைக் கொண்ட அடையாளக் கார்டுடன் இசி-யின் ‘ஏ’ பாரத்தின் மூலம் அந்தப் பதிவு நிகழ்ந்துள்ளது. அந்த பாரத்தை அரசியல் கட்சி ஒன்று சமர்பித்துள்ளது.
ஆனால் எந்த அரசியல் கட்சி என்பதை இசி இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
விதிமுறைகளுக்கு ஏற்ப அவர் பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் தேசியப் பதிவுத் துறை அவருடைய அடையாளக் கார்டை உறுதி செய்துள்ளது என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார். அதனால் அந்தப் பதிவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இசி தற்போது அந்த ஏ பாரத்தைத் தேடி வருகின்றது. அது தன்மூப்பாக யாரையும் எந்த இடத்திலும் வாக்காளராகப் பதிவு செய்வது இல்லை என்றும் அவர் சொன்னதாகவும் பெரித்தா ஹரியான் குறிப்பிட்டது.
ராமசாமியின் புதல்வியான 25 வயது ஸ்ரீ வைதேகி இப்போது லண்டனில் முனைவர் பட்டப்படிப்பை படித்து வருகின்றார்.
காஜாங்கில் உள்ள ராமசாமியின் குடும்ப வீட்டுக்கு ஸ்ரீ வைதேகியின் வாக்களிப்பு விவரங்களுடன் சிலாங்கூர் பிஎன் பிரச்சாரக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட போது தமது புதல்வி அவருக்குத் தெரியாமலே வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதை ராமசாமி தெரிந்து கொண்டார்.
ஏற்கனவே திருச்செல்வம் வல்லிபுரம் என்ற இன்னொரு பெற்றோர், தமது புதல்வி வாக்காளராகப் பதிந்து கொள்ளாத வேளையில் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாக மலேசியாகினியிடம் புகார் செய்துள்ளார்.
சிலாங்கூர் பிஎன் தலைவர் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையெழுத்திட்ட கடிதம் தீபாவளி கார்டு ஒன்று கிடைத்த போது தமது புதல்வியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை திருச்செல்வம் அறிந்து கொண்டார்.