ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் பலியான குழந்தை

china one child policyபீஜிங் : சீனாவில், ஒரு குழந்தை திட்டத்தை செயல்படுத்துவதில் கண்டிப்பு காட்டிய அதிகாரிகளால், 13 மாத குழந்தை, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 1979ல் ‘ஒரு குழந்தை திட்டம்’, அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நகர்ப்பறங்களில் இருக்கும் தம்பதிகள், ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளவர்கள், முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள, அனுமதி உண்டு.

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு, அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி, ஷிஜியாங் பகுதி தம்பதியினரிடம் மூன்றாவது குழந்தை பெற்றதற்காக அபராத தொகை கேட்டு சீன மக்கள் தொகை கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கெடுபிடி செய்தனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் பெற்றோர் கையில் இருந்து தவறி விழுந்த 13 மாத ஆண் குழந்தை மீது அதிகாரிகள் வந்த வாகனம் ஏறியது. இதில் குழந்தை இறந்தது. இந்த சம்பவம் சீன மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.