ஊழல் மீதான 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்துக்கு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கியுள்ள விளக்கம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அதனை அவசியம் மறுக்க வேண்டும்.
பிப்ரவரி 13ம் தேதி சின் சியூ நாளேட்டில் வெளியான முதல் பக்கத் தலைப்புச் செய்தி இது: “தேர்தல் காலத்தின் போது புரியப்படும் ஊழல் குற்றங்கள் தொடர்பில் நமது சட்டங்கள் தனிநபர்கள் சம்பந்தப்பட்டதாகும். அரசியல் கட்சிகள் அல்ல என அந்த ஆணையத்தின் துணைத் தலைமை ஆணையர் (தடுப்பு) சுத்தினா சுத்தான் கூறியுள்ளார். ஆகவே ஒர் அரசியல் கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைத் தூண்டும் பொருட்டு கொடுக்கப்படும் அன்பளிப்புக்களோ பணமோ குற்றமல்ல. குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்குகளை செலுத்துமாறு ஊக்குவிப்பதற்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்டால் மட்டுமே அது குற்றமாகும்.”
பிரதமரும் பிஎன் தலைவர்கள் அறிவித்து வரும் திட்ட ஒதுக்கீடுகள் மக்களுக்கு நன்மையைக் கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டவை. எனவே அதனை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றோ லஞ்சம் என்றோ கருத முடியாது. அத்துடன் அது பிஎன் -னுக்கு ஆதரவைத் தேடும் எண்ணத்தைக் கொண்டது. தலைவருக்காக அல்ல என்றும் சுத்தினா மேலும் கூறினார்.
அந்தச் சட்டம் மீது எம்ஏசிசி தந்துள்ள விளக்கம் மீது நான் முரண்படுகிறேன்
வாக்குகளை வங்குவது லஞ்சமாகும்
முதலாவதாக அந்தச் சட்டத்தின் 10வது பிரிவு லஞ்சம் என்பதற்கு விளக்கம் அளிக்கிறது. தனிப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவு தேடும் நோக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும் என அதில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. வாக்குகளை அளிக்குமாறு தூண்டும் பொருட்டும் கொடுக்கப்படுவது லஞ்சம் என அது வரையறுக்கிறது. அத்தகைய தேர்தல் ஆதரவு தனிநபருக்கா அல்லது அரசியல் கட்சிக்கா என்பது குறிப்பிடப்படவில்லை.
அந்த சூழ்நிலையில் ஒர் அரசியல் கட்சிக்கு ஆதரவு தேடுவதற்காக பணம் கொடுப்பது சட்டத்தின் எல்லைக்குள் வரவில்லை என எப்படி சுத்தினா கூற முடியும் ?
அந்த அன்பளிப்பு எதற்காகக் கொடுக்கப்படுகிறது- வாக்குகளை கவருவதற்காக கொடுக்கப்படுவதையே- எம்ஏசிசி கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கொடுக்கபடுவது குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கா அல்லது வேட்பாளர் குழுவுக்கா அல்லது ஒர் அரசியல் கட்சிக்கா என்பது முக்கியமல்ல.
இரண்டாவதாக பிரதமர் தமது பிரச்சாரத்தின் போது மானியங்களை வழங்குவது லஞ்சமோ அல்லது அதிகாரத் துஷ்பிரயோகமோ அல்ல என சுத்தினா அதனை நியாயப்படுத்துகிறார். அதற்கு அவர் சொல்லும் இரண்டு காரணங்கள்: அது அவரது தனிப்பட்ட நன்மைக்கு அல்ல. மாறாக அவரது கட்சிக்கு தேர்தல் ஆதரவைத் தேடுவதாகும். அடுத்து மக்களுக்கு நன்மையைத் தரும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
முதல் காரணம் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது. முந்திய பத்திகளில் அது விளக்கப்பட்டுள்ளது. அவர் சொல்லும் இரண்டாவது காரணம் உண்மை நிலவரத்துடன் ஒத்துப் போகவே முடியாது. ஏனெனில் அந்த மானியங்களுக்கான நோக்கம் தெள்ளத் தெளிவானது. பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு கூட்டத்தினரைக் கேட்டுக் கொள்ளும் போது தான் அவர் அந்த மானியங்களை அறிவிக்கிறார்.
அந்த மானியங்கள் பிரதமருடைய தனிப்பட்ட நன்மைக்காக அல்ல என சுத்தினா சொல்லும் இரண்டாவது காரணம் அப்பட்டமான பொய்யாகும். அந்த மானியங்கள் அவரது கட்சிக்கு ஆதரவைப் பெருக்கும் எண்ணத்தைக் கொண்டவை. அதனால் அவரது கட்சி மீண்டும் அரசாங்கமாக தேர்வு செய்யப்பட்டு அவரும் பிரதமராகத் தேர்வு செய்யப்படக் கூடிய வாய்ப்பும் உண்டு.
அரசியல் கட்சிகளுக்கு விதி விலக்கு கிடையாது
மூன்றாவதாக நமது தேர்தல் சட்டம் தனிநபரை நோக்கமாகக் கொண்டவை என்றும் அரசியல் கட்சியை அல்லஎன்றும் அதனால் தவறு செய்யும் அரசியல் கட்சிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தும் அதிகாரம் எம்ஏசிசி-க்கு இல்லை என சுத்தினா கூறிக் கொள்கிறார். உண்மையில் அது மிகவும் ஆபத்தான கருத்தாகும். ஒர் அரசியல் கட்சி விலக்கு பெற்ற நிலையில் தேர்தல் குற்றங்களைப் புரியலாம் என்ற எண்ணத்தை அது தந்து விடக் கூடும்.
அந்தக் கருத்து கொஞ்சம் கூட அர்த்தமில்லாதது. ஒர் அரசியல் கட்சி தேர்தல் சட்டங்களை மீறும் போது அந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ள தலைவர்கள், அதிகாரிகள், முகவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படக் கூடாது ? தேர்தல் குற்றங்களின் தன்மையைப் பொறுத்து தனிநபர்கள் மட்டுமின்றி முழு அரசியல் கட்சியும் தண்டிக்கப்படுவதற்கு நம்மிடம் போதுமான சட்டங்கள் உள்ளன.
விரிவான மோசடிகள் போன்ற ஊழல்கள் நிறைந்த மலேசியத் தேர்தல் முறை இப்போது எதிர்க்கட்சிகள் மீது அடுக்கி வைக்கப்பட்டுள்ள தடைகளுடன் தேர்தல் களம் சமநிலையற்றதாகத் திகழ்கிறது. அந்த நிலைக்கு எம்ஏசிசி-யே முக்கியப் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியமான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாற்ற அலைகள் வெகு வேகமாக வீசிக் கொண்டிருக்கின்றன. போலீஸ் படை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகள் அரசியல் நடு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. அண்மைய KL112 பேரணியில் அது தெளிவாகத் தெரிந்தது.
நமது வரலாற்றில் மிகவும் கடுமையான இந்த நேரத்தில் தூய்மையான, நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு விருப்பு வெறுப்பின்றி எம்ஏசிசி தனது அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற மக்கள் நம்பிக்கையை அது பூர்த்தி செய்யுமா ?
——————————————————————————–
கிம் குவேக் ஒய்வு பெற்ற கணக்காயர். தடை செய்யப்பட்டுள்ள ‘The March to Putrajaya’ என்னும் புத்தகத்தின் ஆசிரியர்.