நஷூத் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சி!

nasheedஇந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், கைது செய்யப்படுவதை தவிர்க்க, இந்திய வெளியுறவு அதிகாரிகள், மாலைதீவு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாலைதீவில், 2008ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முகமது நஷீத் (வயது 45) நீதிபதி ஒருவரை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு அவருக்கு எதிராக போலிசார் புரட்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் நஷீத், ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நீதிபதியை கைது செய்ய உத்தரவிட்டதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் பிணையில் வெளியே வந்தார்.

இதற்கிடையே, இந்திய பயணம் மேற்கொண்ட நஷீத், கடந்த, 10-ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் இந்திய பயணம் மேற்கொண்டதால், 11ம் தேதிதான், மாலே நகருக்கு திரும்பினார்.

நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதற்காக, நீதிமன்றம் அவருக்கு கைது பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, அவர் கைதாவதை தவிர்க்க மாலேயில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

நஷீத்தை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை இணை செயலர் ஹர்ஷவர்தன் தலைமையிலான உயர் மட்ட குழு, மாலைத்தீவுக்கு சென்றுள்ளது.

நஷீத்தை கைது செய்வதை தவிர்க்க, அவர்கள், அந்தநாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல் சமது உள்ளிட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக நஷீத் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நஷீத் மீதான விசாரணை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.